திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 8 நவம்பர் 2019 (20:10 IST)

நடிகர் சங்க தனி அதிகாரி குறித்த வழக்கு: விஷாலுக்கு பின்னடைவு

தயாரிப்பாளர் சங்கத்தை போலவே நடிகர் சங்கத்திற்கும் தமிழக அரசு தனி அதிகாரியை நியமனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று விஷால் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. 
 
இந்த மனு, நீதிபதி கல்யாணசுந்தரம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது விஷால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடுகையில், ‘நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், சங்கத்திற்கு தனி அதிகாரியை அரசு நியமித்தது சட்ட விரோதம் என்றும் தனி அதிகாரியின் நியமனத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிட்டார். 
 
இதற்கு பதிலளித்த தமிழக அரசின் வழக்கறிஞர், நடிகர் சங்கத்தில் தற்போது வெற்றிடம் இருப்பதால்தான் சங்க நடவடிக்கைகளை கவனிக்க தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாக கூறினார். 
 
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமனத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்றும் இதுகுறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்த நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 
தனி அதிகாரி நியமனத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்படாதது விஷால் தரப்புக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது