1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 25 மே 2015 (13:22 IST)

2016 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி: சீமான்

2016 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
 

 
திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி அரசியல் மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார்.
 
இந்த மாநாட்டில் சீமான் பேசும்போது, ''இந்த உலகத்தை அரசியலும், அறிவியலும்தான் இயக்கிக் கொண்டிருக்கின்றன. பிறப்பு முதல் இறப்பு வரை அரசியல் தீர்மானிக்கிறது. தமிழ்த்தேசிய இனத்திற்காக நாம் தமிழர் கட்சி பாடுபடுகிறது.
 
இது மாற்று அரசியல் கட்சியில்லை; மாற்று அரசியல் புரட்சி. எங்கும் தமிழ் இல்லை, இனம் அழிந்து கொண்டே வருகிறது என்னும்போது, அதை மீட்டுருவாக்கம் செய்யும் வரலாற்றுப் பணியைத்தான் நாம் தமிழர் கட்சி செய்து கொண்டிருக்கிறது. வந்தாரையெல்லாம் வாழ வைத்தோம், பிரச்சனையில்லை - அவர்களை ஆள வைத்தபோதுதான் சிக்கல் வந்தது.
 
இனி தமிழ்நாட்டில் தமிழர்தான் ஆள வேண்டும். ஆட்சியை மாற்றிப் பயனில்லை, அரசியல் மாற்றம் வர வேண்டும். மக்களின் பிரச்சனைகளை அரசு எடுக்காதபோது, அந்த அரசை மக்கள் கையில் எடுக்க வேண்டியுள்ளது. நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என்பதை இன்னும் பலரும் நம்பவில்லை. திராவிடக் கட்சிகள், தேசியக் கட்சிகள் யாருடனும் எப்போதும் கூட்டு கிடையாது.
 
2016 தேர்தலில் தமிழ்நாட்டில் 234 தொகுதியிலும், புதுச்சேரி, மற்றும் காரைக்காலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும். இது மாற்று அரசியலை முன்வைக்கும் போர்க்களம். அடுத்த 2021 தேர்தலில் நாம் தமிழர் ஆட்சியைப் பிடிக்கும். அதன்பிறகு அடுத்த 6 மாதங்களில் தமிழீழம் மலரும். ஈழத்தின் விடுதலை ஒன்றே நமது வாழ்நாள் இலக்கு" என்று சீமான் பேசினார்.