ஆளுநர் அருகில் நிர்மலாதேவி - சந்தேகத்தை எழுப்பும் முருகனின் மனைவி
தனது கணவர் பேராசிரியர் முருகன் எந்த குற்றமும் செய்யவில்லை என அவரின் மனைவி சுஜா தெரிவித்துள்ளர்.
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், அவரை தவறு செய்ய தூண்டியதாக பேராசிரியர் முருகன், மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் ஒரு சில தகவல்களை கூறினாலும், இதில் தொடர்புடைய முக்கிய விவிஐபிக்களின் பெயரை கூற மறுக்கிறார்களாம். அதாவது, யாருக்காக இதை செய்தார்கள் என்கிற முக்கிய தகவலை போலீசாரால் பெற முடியவில்லை எனத் தெரிகிறது.
இதனால், விசாரணையில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், 4வது நாட்களாக போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தனது கணவர் முருகன் எந்த தவறும் செய்யாத அப்பாவி என அவரின் மனைவி சுஜா கூறியுள்ளார்.
என் கணவர் முருகன் நிர்மலா தேவியை 3 முறைதான் சந்தித்து பேசியுள்ளார். அதுவும் அலுவல் ரீதியாகத்தான் பேசினார். புத்தாக்கப் பயிற்சிக்கு அறை வசதிகள் செய்து கொடுத்தார். மேலதிகாரிகளை தப்ப வைக்க என் கணவரை பலிகடா ஆக்கியுள்ளனர். எனது கணவரை போலீசார் கைது செய்வதற்கு முன்பே எங்களுக்கு மிரட்டல்கள் வந்தன. உங்களை குண்டர் சட்டத்தில் போட்டு விடுவார்கள். உடனே தலைமறைவாகி விடுங்கள் எனக் கூறினர். இதற்கு பின் பெரிய சதி இருக்கிறது. ஆளுநர் அருகே நிர்மலா தேவியை நிற்க வைத்து புகைப்படம் எடுக்க வைத்தது யார் என்பதை கண்டுபிடித்தால் உண்மை வெளியே தெரிய வரும்” என சுஜா கூறினார்.
அவரிடம் போலீசார் மற்றும் ஆளுநர் நியமித்த ஓய்வு பெற்ற அதிகாரி சந்தானம் ஆகியோர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.