இளம்பெண் கழுத்து அறுத்து கொலை: பெரம்பலூரில் பயங்கரம்

Ilavarasan| Last Modified சனி, 9 ஆகஸ்ட் 2014 (18:46 IST)
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே அடையாளம் தெரியாத இளம்பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தது சனிக்கிழமை தெரியவந்தது.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே வயலூர் கிராமத்தில் உள்ள சின்னாற்று மணல் பகுதியில் 35 முதல் 40 வயதுள்ள இளம்பெண் ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பதாக, வயலூர் கிராம பொதுமக்கள் குன்னம் காவல் நிலையத்துக்கு சனிக்கிழமை தகவல் அளித்தனர்.

அதைத்தொடர்ந்து, குன்னம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று கொலை செய்யப்பட்டு கிடந்த இளம்பெண்ணின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தகவலறிந்த பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்தரா, மங்கலமேடு துணை கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மோப்ப நாய், தடயவியல் நிபுணர்கள் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்து கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்தனர்.

இதுகுறித்து வயலூர் கிராம நிர்வாக அலுவலர் (பொ) ஜெயா அளித்த புகாரின்பேரில், குன்னம் காவல் நிலைய ஆய்வாளர் சிவராஜ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.


இதில் மேலும் படிக்கவும் :