வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : வியாழன், 17 ஜூலை 2014 (18:51 IST)

வடசென்னை ரவுடி கேட் ராஜேந்திரன் கொலையாளிகளின் பரபரப்பு வாக்குமூலம்

பிரபல ரவுடி கேட் ராஜேந்திரன் கொலையில் பிடிபட்ட கொலையாளிகள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
 
சென்னை திருவொற்றியூரை சேர்ந்தவர் கேட் ராஜேந்திரன் (55). வடசென்னையை கலக்கிய பிரபல ரவுடி. இவர் மீது வடசென்னை மற்றும் புறநகர் காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல் உள்பட 25 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது மனைவி மேகலா (46). இவர்களுக்கு கண்ணன் (27), கலைமணி (26) ஆகிய மகன்கள் உள்ளனர். இருவரும் இன்ஜினியர்கள்.
 
காவல்துறையினரின் கெடுபிடி மற்றும் சென்னையில் எதிரிகள் அதிகரித்ததால், உயிருக்கு பாதுகாப்பு தேடி கேட் ராஜேந்திரன், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் கலைஞர் நகரில் சொந்தமாக வீடு கட்டி சென்றுவிட்டார். இங்கு வந்த சில நாட்களில் ஆள் கடத்தல் வழக்கில் ராஜேந்திரனை காவல்துறையினர் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
 
கடந்த மாதம் 3 ஆம் தேதி, ராஜேந்திரன் ஜாமீனில் வெளியே வந்தார். நேற்று முன்தினம் காலை 8 மணியளவில் கேட் ராஜேந்திரன் நடைபயிற்சி சென்றபோது, ஒரு காரில் வந்த கும்பல் ராஜேந்திரனை விரட்டிச்சென்று சுற்றிவளைத்து, சரமாரியாக வெட்டி கொன்றது. பின்னர், காரில் தப்பி சென்றனர். தகவலறிந்து, ஊத்துக்கோட்டை டிஎஸ்பி குமரவேல், பெரியபாளையம் ஆய்வாளார் சீனிபாபு ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அந்த பகுதி மக்களிடம் விசாரித்தனர்.

பின்னர், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதற்கிடையில், காரில் தப்பியோடிய கும்பலை திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் அருகே காவல்துறையினர் மடக்கினர். கார் டிரைவர் உட்பட 5 பேரை பிடித்து, காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அதில், சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த கார் டிரைவர் ஆண்டனிராஜ் (31), காசிமேட்டை சேர்ந்த திருப்பதி (30), மூலக்கொத்தளத்தை சேர்ந்த இம்ரான் (24). தி.நகரை சேர்ந்த அப்புன் (எ) மகேஷ் (23), அரக்கோணம் மணிகண்டன் (21) என தெரிந்தது. அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். பைக்கில் தப்பி சென்றது திருவொற்றியூரை சேர்ந்த பிரபல ரவுடி மகி (எ) மகேஷ் (32) என தெரிந்தது.

காவல்துறையினரிடம் திருப்பதி அளித்த வாக்குமூலத்தில், மகியின் வீட்டுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு, கேட் ராஜேந்திரன் சென்றார். மகியின் தந்தையிடம், எனது நண்பன் சுப்பிரமணியை உன் மகன் கொன்றுவிட்டான். உன் மகனை, நான் கொலை செய்யாமல் விடமாட்டேன் என்று கூறி சென்றார். இதனால், ஆத்திரமடைந்த மகி, கேட் ராஜேந்திரனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தான். கடந்த வாரம் நான் சிறையில் இருந்து வெளியே வந்தேன். கடந்த 14 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு மகிக்கு போன் செய்தேன். வீட்டுக்கு வருமாறு கூறினான். அங்கு சென்றபோது, மணிகண்டன் அங்கு இருந்தான். அதன்பிறகு முருகன், இம்ரான் ஆகியோர் அங்கு வந்தனர். பின்னர், மகி ஒருவருக்கு போன் செய்து, பணம் கொண்டு வரும்படி கூறினான். அதன் பிறகு நான் அப்புனை வரவழைத்தேன். அப்புன் வரும்போது, காரை கொண்டு வந்தான்.
 
எர்ணாவூர் பாலத்துக்கு அந்த காரில் வந்தபோது, அந்த காரை நிறுத்திவிட்டு, வேறு ஒரு காரை வரவழைத்து, அங்கிருந்து மெரினா பீச்சுக்கு சென்றோம். இம்ரான், முருகன் ஆகியோர் பைக்கில் பீச்சுக்கு வந்தனர். மகியும் அங்கு வந்தான். அப்போது, 4 கத்தியும், செலவுக்கு 10 ஆயிரமும் மகி கொடுத்தான். இரவு பெரிய பாளையத்தில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கினோம். காலையில் 6 மணிக்கு எழுந்து, புதுப்பாளையத்தை சேர்ந்த முருகனின் மாமாவை வரவழைத்தோம். அவரும் பெரியபாளையம் வந்தார். அங்கிருந்து முருகனும், அப்புனும் கேட் ராஜேந்திரன் வீட்டின் அருகில் பைக்கில் சென்று நின்றிருந்தனர். முருகனின் மாமா, கேட் ராஜேந்திரனிடம் சாட்சி வந்துள்ளது என கூறி அழைத்து கொண்டு வந்தார். அவர் வெளியே வந்ததும், கேட் ராஜேந்திரனும், முருகனின் மாமாவும் ஒரு பைக்கில் சென்றனர். 
 
சிறிது தூரம் சென்றதும், பைக்கை நிறுத்தி விட்டு நடந்து சென்றனர். அவர்களை முருகனும், அப்புனும் பைக்கில் பின் தொடர்ந்து சென்றனர். ரால்லபாடி சுடுகாடு எதிரே காவல் குடியிருப்பு அருகில் ஒரு பெட்டி கடைக்கு அவர்கள் சென்றார்கள். அந்த கடையில் நுழையும்போது, காரில் வந்த மகி, கேட் ராஜேந்திரன் இங்கே இருக்கிறான் போடுங்கடா என குரல் கொடுத்தான். உடனே உடன் இருந்த நான், இம்ரான், மணிகண்டன், அப்புனு சேர்ந்து சரமாரியாக வெட்டினோம். பின்னர், அங்கிருந்து காரில் தப்பினோம். முருகன் பைக்கில் தப்பினார். அவரது மாமா எந்த பக்கம் சென்றார் என தெரியாது. மகி, அந்த வழியாக வந்த ஒருவரின் பைக்கை பிடுங்கி கொண்டு தப்பினார். நாங்கள் காரில் ஏறி ஊத்துக்கோட்டை வழியாக திருவள்ளூர் நோக்கி சென்றோம். அப்போது காவல்துறையினர் சுற்றி வளைத்தனர். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். 
 
மேலும் இந்த கொலைக்கும் கார் டிரைவர் ஆண்டனி ராஜிக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் சவாரிக்காக அவரை அழைத்தோம் என்றும் கூறியுள்ளார். இதை தொடர்ந்து காவல்துறையினர், திருப்பதி, மணிகண்டன், இம்ரான், அப்புன் (எ) மகேஷ் ஆகிய 4 பேரை கைது செய்து, ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். முக்கிய குற்றவாளியான மகி (எ) மகேஷ், மீஞ்சூர் நாப்பாளையம் முருகன், புதுப்பாளையத்தை சேர்ந்த முருகனின் மாமா ஆகியோரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.