1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : சனி, 5 ஜூலை 2014 (10:22 IST)

காதலை கைவிட மறுத்த மகளை அரசு மருத்துவமனையில் கொடூரமாக கொன்ற தந்தை

காதலை கைவிட மறுத்த மகளை அரசு மருத்துவனையில்  தந்தை கத்தியால் குத்திக் கொன்றார். மருத்துவமனையில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
கரூர் மாவட்டம் சக்கரபாளையத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார் என்ற லோகநாதன் (52). கைரேகை ஜோதிடர். இவருக்கு 3 மகள், 2 மகன்கள் உள்ளனர். மனைவி பழனியம்மாள் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று விட்டார். மூத்த மகன் சத்யராஜூக்கு திருமணமாகி தனியாக வசிக்கிறார். மற்ற 3 மகள் மற்றும் ஒரு மகனுடன் ரவிக்குமார் வசித்து வந்தார்.

இந்நிலையில் ரவிக்குமாருடன் தகராறு ஏற்பட்டு அவரது மகள்கள் சாமுண்டீஸ்வரி(22), கவுசல்யா(15), லாவண்யா(13) ஆகியோர் கொளத்தூரில் உறவினர் வீட்டில் தங்கியிருந்தனர். அங்கு கவுசல்யாவுக்கு, நேற்று முன்தினம் உணவு ஒத்துக்கொள்ளாமல் வாந்தி ஏற்பட்டது. இதனையடுத்து மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உதவியாக மூத்த சகோதரி சாமுண்டீஸ்வரி மருத்துவமனையில் இருந்தார். இதையறிந்த ரவிக்குமார் மருத்துவமனைக்கு வந்தார். 
 
நேற்று அதிகாலை மகள் சாமுண்டீஸ்வரியுடன் ரவிக்குமார் டீ குடிக்க செல்வதற்காக மருத்துவமனை முதல் மாடியில் இருந்து கீழே நடந்து வந்தனர். அப்போது ரவிக்குமார், திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சாமுண்டீஸ்வரியை குத்தினார்.

இதில், பலத்த காயம் அடைந்த அவர், தந்தையின் பிடியில் இருந்து தப்பியோடினார்.அதிகாலை நேரம் என்பதால் மருத்துவமனியில் ஆட்கள் நடமாட்டமும் இல்லை. அவசர சிகிச்சை பிரிவின் வராண்டாவில் விழுந்து சாமுண்டீஸ்வரி இறந்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த மருத்துவமனை காவலர்கள், ரவிக்குமாரை பிடித்து அவரின் கை, கால்களை கட்டிப்போட்டு, காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் ரவிக்குமாரை கைது செய்தனர்.
 
விசாரணையில், சேலம், கொளத்தூரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகள் பூங்கொடியை, ரவிக்குமாரின் மூத்த மகன் சத்யராஜ் திருமணம் செய்துள்ளார். பூங்கொடியின் சகோதரர் ராஜாவை, ரவிக்குமாரின் மூத்த மகள் சாமுண்டீஸ்வரி காதலித்ததாக கூறப்படுகிறது. ராஜாவுக்கு திருமணம் செய்ய முறைப்படி பெண் கேட்டுள்ளனர். இதற்கு ரவிக்குமார் மறுப்பு தெரிவித்தார்.

தனது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தந்தையுடன் தகராறு ஏற்பட்டதையடுத்து, சாமுண்டீஸ்வரிக்கு தனது தங்கைகள் கவுசல்யா(15), லாவண்யா(13) ஆகியோருடன் கொளத்தூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். பின்னர் ரவிக்குமார் அழைத்தும் மகள்கள் வர மறுத்தனர். தனது பேச்சை மகள்கள் கேட்காததால் சாமுண்டீஸ்வரி மீது ஆத்திரத்தில் இருந்ததால் அவரை கொலை செய்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.