வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Bala
Last Updated : வெள்ளி, 11 செப்டம்பர் 2015 (12:05 IST)

செங்கோட்டையில் ஆட்டோ மீது லாரி மோதிய சம்பவம் திட்டமிட்ட படுகொலை?

திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை அருகே ஷேர் ஆட்டோ மீது லாரி மோதியதில் 2 பெண்கள் உள்பட 6 பேர் இறந்தனர். இந்த சம்பவம் திட்டமிட்ட படுகொலை என கூறப்படுகிறது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
 

செங்கோட்டை அருகே உள்ள புளியரைக்கு கற்குடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் கருப்பசாமி தனது ஷேர் ஆட்டோவில் அடிவெட்டி, அவரது மகன் மகேஷ் ஆகியோரை ஏற்றிக்கொண்டு புளியரை காவல் நிலையத்திற்கு நிபந்தனை ஜாமீன் கையெழுத்து போடுவதற்கு சென்றுள்ளார். அப்போது செல்லும் வழியில் 2 பெண்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்வதற்காக அதே ஆட்டோவில் ஏறியுள்ளனர். இதே போல் முருகன் என்பவரும் புளியரை செல்வதற்காக அதே ஆட்டோவில் ஏறியுள்ளார். இவர்களை ஏற்றிக்கொண்டு புளியரை நோக்கி ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது புதூர் என்ற பகுதியில் கேரளாவிலிருந்து செங்கோட்டையை நோக்கி வந்த லாரி ஒன்று ஆட்டோவின் மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த 6 பேரும் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் திருமலைக்குமாரும், ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த அடிவெட்டியும் கற்குடி நெடுகல் தெருவைச் சேர்ந்தவகள் என தெரியவந்துள்ளது. கடந்த மாதம் 8ம் தேதி திருமலைக்குமாரின் தம்பி பாலகிருஷ்ணனை தாக்கியதாக சுப்பையா, விபத்தில் பலியான மகேஷ், அடிவெட்டி ஆகியோர் மீது புளியரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.


அதேபோல் அடிவெட்டியின் உறவினர் ஹரிகரன் அளித்த புகாரின்பேரில் லாரி ஓட்டுநர் திருமலைக்குமார், முருகன், கோட்டூர்சாமி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் தற்போது அடிவெட்டியும், மகேசும் ஜாமீனில் வந்து தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தனர்.


இதனால் ஏற்பட்ட பகை காரணமாகவே அடிவெட்டி, மகேஷ் ஆகியோரை கொல்லும் நோக்கத்தில் ஆட்டோ மீது திருமலைக்குமார் லாரியால் மோதி இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய திருமலைகுமார், கையில் கத்தியோடு ஓடியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீஸார் திருமலைகுமாரை தேடி வருகின்றனர்.