1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : சனி, 28 மார்ச் 2015 (09:32 IST)

காவிரியின் குறுக்கே அணைகட்ட எதிர்ப்பு: தமிழகத்தில் பெரும்பாலான கடைகள் அடைப்பு

காவிரியின் குறுக்கே புதிய அணைகளைக் கட்டும் கர்நாடக அரசின்  திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன, அரசு பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன.
 
காவிரியின் குறுக்கே மேகதாது, ராகி மணல் ஆகிய இடங்களில் 2 புதிய அணைகளை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டு அதற்கான பூர்வாங்க பணிகளை தொடங்கியுள்ளது.
 
இதற்காக கர்நாடக மாநில பட்ஜெட்டில் ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் தமிழ்நாட்டில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
 
இதற்கு தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. விவசாயிகள் போராட்டத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆகியவையும் ஆதரவு அளிப்பதாக அறிவித்திருக்கின்றன.
 
தமிழ்நாடு டிப்பர் லாரி மற்றும் மண் அள்ளும் எந்திர உரிமையாளர் சங்கமும் இந்த போராட்டத்தை ஆதரித்தது. இதனால் இன்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
 
ஒருசில கடைகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளன, இந்நிலையில், அரசு பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பெரும்பாலான இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது.