1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 8 ஜூலை 2020 (07:59 IST)

சென்னையில் இருந்து கொத்து கொத்தாய் காலி செய்யும் குடும்பங்கள்: வீடுகள் காலி

சென்னையில் இருந்து கொத்து கொத்தாய் காலி செய்யும் குடும்பங்கள்
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பல சிறு தொழில்கள் செய்து வருபவர்கள் வேலை இன்றி வருமானம் இன்றி உள்ளனர். எனவே அவர்கள் வாடகை மற்றும் இதர செலவுகளை சமாளிக்க முடியாததால் சென்னையை விட்டு சென்று கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது 
 
ஏற்கனவே சென்னையை விட்டு பலர் கொத்துக்கொத்தாக சொந்த ஊரை நோக்கி சென்றுள்ள நிலையில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏற்பட்டவுடன் பலர் சென்னையை காலி செய்து கொண்டு சொந்த ஊரை நோக்கி செல்கின்றனர் 
 
சென்னையில் குறைந்தபட்ச வீட்டு வாடகை 7000 முதல் 10000 வரை இருப்பதாகவும் அதனை அடுத்து குடும்பச் செலவுகள் ஆகியவை சேர்த்து குறைந்த பட்சம் 20 முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை மாதம் தேவை என்றும் ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அந்த பணத்தை சம்பாதிப்பது என்பது இயலாத ஒன்றாக இருப்பதால் சென்னையை விட்டு காலி செய்வதாக தெரிவிக்கின்றனர் 
 
சொந்த ஊருக்கு சென்றால் 500 முதல் 1,000 ரூபாய் வாடகைக்கு வீடு கிடைக்கும் என்றும் மாதம் 10ஆயிரம் ரூபாய் இருந்தால் வீட்டுச் செலவை சமாளித்து விடலாம் என்றும் பலர் தெரிவித்து வருகின்றனர் மேலும் சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவிக் கொண்டே வருவதால் எப்போது இயல்பு நிலை திரும்பும் என்று தெரியவில்லை என்பதால் இதற்கு மேல் தங்களால் சமாளிக்க முடியாது என்று கூறி பலர் சென்னையை விட்டு காலி செய்து சென்றுகொண்டிருக்கின்றனர்
 
இதன் காரணமாக சென்னை புறநகர் பகுதியில் பல வீடுகள் காலியாக இருப்பதாகவும் இதனால் வீட்டின் உரிமையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. சென்னையில் ஒரு காலத்தில் வீடு வாடகைக்கு கிடைக்காமல் இருந்த நிலை மாறி தற்போது ஏகப்பட்ட வீடுகள் காலியாக இருப்பது பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளது