வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 16 நவம்பர் 2016 (18:19 IST)

எங்களுக்கு உணவருந்தவே பணம் இல்லை; அதிமுகவுக்கு கொண்டாட்டமா? - கருணாநிதி

மத்திய அரசு அறிவிப்பால் கழகத் தோழர்களுக்கு உணவருந்தக் கூட பணம் இல்லாத நிலையில், அதிமுகவினர், அமைச்சர்கள் ஆடம்பரமான முறையிலே செலவழித்து குதூகலம் கொண்டாடி வருகிறார்களாம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.


 

இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், புதுவை நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளில் வரும் 19-11-2016 அன்று இடைத் தேர்தல் நடைபெறுகிறது. தஞ்சைத் தொகுதியில் நகரக் கழகச் செயலாளராக இருந்து நாளும் உழைத்து மறைந்த மாவீரன், தஞ்சை பூபதியின் அருமைச் செல்வி, என்னுடைய அன்பு அன்னையாரின் பெயரைத் தாங்கிய “அஞ்சுகம்” கழக வேட்பாளராக போட்டியிடுகிறார்.

அது போலவே அரவக்குறிச்சி தொகுதியில், “கே.சி.பி.” என்று அனைவராலும் அழைக்கப்படும் அன்பிற்குரிய கே.சி. பழனிசாமி போட்டியிடுகிறார்.

திருப்பரங்குன்றம் தொகுதியில், கழகத்திற்குப் புதிதாக வந்த போதிலும், செயல்வீரர்களைப் போற்றத்  தவறமாட்டோம் என்பதற்கு அடையாளமாக, டாக்டர் சரவணன் போட்டியிடுகிறார்.

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில், நமது தோழமைக் கட்சியாம் காங்கிரஸ் வேட்பாளர், எளிமையின் உருவகம், எவரும் விரும்பும்  இன்றைய புதுவை முதல்வர் நாராயணசாமி போட்டியிடுகிறார்.

இந்த இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக நானும், பொதுச் செயலாளர் பேராசிரியரும் நேரில் செல்லாவிட்டாலும், கழகப் பொருளாளர் தம்பி மு.க. ஸ்டாலின் தலைமையில், கழகத்தின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், ஒன்றிய, நகரக் கழகச் செயலாளர்கள், கழக முன்னணியினர், தொண்டர்கள் அனைவரும் தொகுதிகளிலேயே முகாமிட்டு இடையறாது வாக்கு கேட்டு வருகிறார்கள்.

பிரச்சாரம் செய்யும் நேரம் போக மிச்சம் இருக்கின்ற நேரத்தில், தம்பி ஸ்டாலின் அங்கே தேர்தல் பணியாற்றும் முன்னணியினரைத்  தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு, எந்த இடத்தில் அவர்கள் பணியாற்றி வருகிறார்கள், நிலவரம் என்ன என்றெல்லாம் கேட்டு எனக்கு அவ்வப்போது அறிவிப்பதோடு, களப் பணியிலே  ஈடுபட்டுக் காரியமாற்றும் செயல்வீரர்களுக்கு உற்சாகமும், ஊக்கமும் ஊட்டி வருகிறார்.

இந்த நேரம் பார்த்து மத்திய அரசு 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துள்ள காரணத்தால், தேர்தல் பணியாற்றும் கழகத் தோழர்களுக்கு உணவருந்தக் கூட பணம் இல்லாத நிலையில் திண்டாடுவதாகச் செய்திகள் வந்துள்ளன.

ஆனால் நம்மை எதிர்த்துப் போட்டியிடும் அதிமுகவினர், அமைச்சர்களின் தலைமையில் தாங்கள் குவித்து வைத்துள்ள தொகையை ஆடம்பரமான முறையிலே செலவழித்து குதூகலம் கொண்டாடி வருகிறார்களாம்.

இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தேர்தல் ஆணையத்துக்கு அளிக்க வேண்டிய “ஏ” பாரம், “பி” பாரங்களில் கையெழுத்திட வேண்டிய அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மருத்துவமனை தீவிரக் கண்காணிப்புப் பிரிவிலே சிகிச்சையிலே இருப்பதால், கையெழுத்துப் போட இயலாமல், கை ரேகை வைத்தார் என்ற செய்தி முன்பு ஏடுகளிலேயே வந்தது.

அதே ஜெயலலிதா தற்போது திடீரென்று இந்த இடைத்தேர்தல்களை யொட்டி, தன் கையெழுத்தை இட்டு அறிக்கை கொடுத்தார் என்ற செய்தியும் இப்போது வந்துள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் தேறி வருகிறார், வீட்டுச் சாப்பாட்டைக் கேட்டு வாங்கிச் சாப்பிடுகிறார், நாற்காலியில் உட்காருகிறார், வேறு அறைக்கு மாற இருக்கிறார், வீட்டுக்குச் செல்லும் தேதியை அவரே முடிவு செய்வார் என்றெல்லாம் செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறதே தவிர, ஓரிரு நபர்களைத் தவிர, அவரை நேரில் கண்டு நலம் விசாரித்தவர்கள், அவர்களுடைய கட்சியிலோ, வேறு கட்சிகளிலோ யாரும் இல்லை. இந்த நிலையில் தான் அவர் இந்த இடைத் தேர்தலில் வாக்கு கேட்டு அறிக்கை கொடுத்துள்ளார்.

500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால், ஏழையெளிய, அடித்தட்டு மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் செய்தி நாளேடுகளில் தொடர்ச்சியாகப் பக்கம் பக்கமாக வந்து கொண்டுள்ளன. அவ்வாறு துன்பமுறும் மக்களுக்கு ஆறுதலாகவோ, ஆதரவாகவோ, தமிழக அரசு மக்கள் படும் இன்னலைக் குறைத்திட ஏதாவது நடவடிக்கை எடுக்குமா என்பது பற்றியோ அறிக்கை விடுவதற்கு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கோ, அதிமுக ஆட்சியினருக்கோ  நேரமும் இல்லை, நினைப்பும் இல்லை. பொதுவாக விவசாயிகள், குறிப்பாக டெல்டா மாவட்ட விவசாயிகள் படுகின்ற அவதிக்கோ அளவில்லை. அதிமுக ஆட்சியில் விவசாயிகள் விரக்தியை விதைத்து, வேதனைகளைத் தான் அறுவடை செய்கிறார்கள்.  

இது வரை சுமார் பத்து விவசாயிகள் கடந்த ஒரு மாதத்திற்குள் அதிமுக ஆட்சியிலே தற்கொலை செய்து கொண்டு மாண்டிருக்கிறார்கள். உள்ளமுருகும் சூழலில், உயிரிழந்த இந்த விவசாயிகளின் இல்லங்களுக்குச் சென்று ஆறுதல் கூறவோ, உரிய நிவாரண நிதி வழங்கவோ அதிமுக அமைச்சர்களில் யாருக்காவது மனம் வந்ததா என்றால் கிடையாது.

விவசாயிகளின் மறைவு குறித்து  இரங்கல் அறிக்கை கொடுக்கக் கூட முன் வராத ஜெயலலிதா, அவசர அவசரமாக, தேர்தலுக்கு ஐந்து நாட்களுக்கு முன்பாகவே வாக்களிக்க வேண்டுமென்று கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார் என்றால், அ.தி.மு.க. வினர் எதை முக்கியமாகக் குறி வைத்து இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா?

தமிழ் மக்களுக்காக ஓய்வின்றி என்றென்றும் உழைத்தவன், உழைத்துக் கொண்டே இருப்பவன், மூத்தவன் என்ற முறையில், உணர்வு கலந்து வாக்காளர்களுக்கு நான்  விடுக்கும் அன்பு வேண்டுகோள் இதுதான்:-

இடைத் தேர்தலில் மோதும் இரு வரிசைகளில் ஜனநாயக மாமணிகள் கோக்கப்பட்டு உண்மையிலேயே கொள்கை உறுதியுடனும் - இலட்சிய தாகத்துடனும் வெற்றிக் கேடயம் ஏந்தி வரும் கொள்கை வீரர் யார் - அவர் உலவும் கொள்கைப் பாசறை எது - என்பதையெல்லாம் ஆய்ந்து, அறிந்து, தெளிந்து - அவர்தம் கரங்களில் வெற்றிக் கனியைத் தரும்போது - அதைப் பெற்றுக் கொள்ள; தாள் பணிந்து கழக அணியினர் தயாராக இருக்கும் போது, உரியவருக்கு உரியதைப் பெற்றுக் கொள்ள உரிமையுண்டு என்பதை அறிந்து, அதற்காகப் பாடுபடுவது தான் அறநெறியாகும் என்பதை உணர்ந்து, இந்த இடைத் தேர்தல்கள் மூலம், செயல் திறனற்ற அ.தி.மு.க. ஆட்சிக்கு நல்லதொரு பாடத்தைத் தந்து நல்வழிப்படுத்தப் பாடுபட வேண்டும்; தமிழகத்தில் மூன்று இடங்களிலும், புதுவை நெல்லித் தோப்பில் தோழமைக் கட்சி வேட்பாளர் நாராயணசாமி அவர்களுக்கும் வெற்றி தேடித் தர வேண்டுமென்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.