வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 23 மே 2019 (21:56 IST)

இந்த வெற்றியை காண கருணாநிதி இல்லையே! மு.க.ஸ்டாலின் உருக்கம்

கருணாநிதி இல்லாத முதல் தேர்தல், திமுக தலைவராக ஸ்டாலின் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் திமுகவின் வெற்றி எப்படி இருக்குமோ? என்று பல அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் கருணாநிதியால் கூட பெற முடியாத ஒரு மாபெரும் வெற்றியை கூட்டணி கட்சிகளின் துணையோடு பெற்றுவிட்டார் மு.க.ஸ்டாலின்
 
இந்த நிலையில் வெற்றிக்கு பின் அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் முன் பேசிய ஸ்டாலின், 'திமுக கூட்டணிக்கு வெற்றியை உருவாக்கி தந்த வாக்காளர்களுக்கு எனது நன்றி. நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்லாமல் சட்டசபை இடைத்தேர்தலிலும் சிறப்பான ஒரு வெற்றியை வாக்காளர்கள் நமக்கு அளித்துள்ளனர். இன்னும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவு பெறாத நிலையிலும் நாடாளுமன்றம், சட்டசபை ஆகிய தேர்தல்களில் மிகப் பெரிய வெற்றியை தேடி தந்துள்ள தமிழ் பெருங்குடிகளுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 
 
இந்த வெற்றியை பெற பாடுபட்ட தலைவர் கருணாநிதியின் உயிருனும் மேலான அன்பு உடன் பிறப்புகளுக்கும் எனது நன்றி. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைமையில் தங்களை ஒப்படைத்துக் கொண்டு இந்த வெற்றிக்கு அரும்பாடுபட்டிருக்கக் கூடிய கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கூட்டணியுடைய எண்ணங்களை, உணர்வுகளை மக்களுக்கு தெரிவித்த ஊடக, பத்திரிகைத் துறையினருக்கும் நன்றி. நாம் களத்தில் இறங்கும் போது கருணாநிதி இல்லாமல் நடைபெறும் தேர்தலில் வெற்றி பெறுவோம் என உறுதியளித்தபடி வெற்றி பெற்றுவிட்டோம். 
 
கருணாநிதி வழியில் நாம் பாடுபட்டிருக்கிறோம். இந்த வெற்றி மாலையை அவரது சமாதிக்கு சென்று அவரிடம் சமர்ப்பிப்போம் என நாம் உறுதி அளித்துள்ளோம். இந்த வெற்றியை காண கருணாநிதி இல்லாமல் போனது வருத்தமாக உள்ளது. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்