ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 30 நவம்பர் 2021 (13:42 IST)

அரசு முடிவு செய்தது போல் தேர்வுகள் நடைபெறும்! – அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி!

தமிழகத்தில் அரசு முன்னரே அறிவித்தது போல ஜனவரி, மார்ச் மாதங்களில் பருவத்தேர்வு நடைபெறும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக கடந்த பல மாதங்களாக பள்ளிகள் செயல்படாமல் இருந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் முதலாக பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மாணவர்கள் படிக்க ஏதுவாக பாடத்திட்டங்களும் குறைக்கப்பட்டிருந்தன. தற்போது தொடர் மழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறையில் இருந்து வருகின்றன.

இதனால் மேலும் பாடத்திட்டங்கள் குறைக்கப்படுமா? தேர்வுகள் ஒத்திவைக்கப்படுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இந்நிலையில் கொரோனா, மழை உள்ளிட்ட காரணங்களால் பொதுத்தேர்வை மே மாதம் நடத்த வேண்டுமென எதிர்கட்சிகள் தெரிவித்து வருகின்றன.

இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் “தமிழக அரசு ஏற்கனவே முடிவு செய்தது போல் பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் பருவத்தேர்வுகள் நடத்தப்படும். அதுவரை எவ்வளவு பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்பதை மாவட்ட முதன்மை அலுவலர்கள் மூலம் தெரிந்து கொண்டு பின்னர் பொதுத்தேர்வு குறித்து முடிவெடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.