1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (21:24 IST)

நள்ளிரவில் நிரம்பும் மேட்டூர் அணை: டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

கர்நாடகாவில் பெய்த அதீத மழையால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. விரைவில் அணையின் மொத்த கொள்ளளவான 120 அடியை அணை எட்ட இருப்பதால் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மழை பெய்யாதா, ஆற்றில் தண்ணீர் வராதா என ஏங்கி கிடந்த டெல்டா விவசாயிகளின் கவலையை போக்க ஒரே அடியாக ஆர்பரித்து வருகிறது காவிரி. கர்நாடகாவின் கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரிக்கு வரும் தண்ணீரின் அளவு மொத்தமாக 75 ஆயிரம் கன அடியாக உள்ளது. ஓகனேக்கலில் ஏற்பட்டுள்ள அதீத வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக அணைகள் அதிக நீரை வெளியேற்றி வருவதால் மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. இன்று நள்ளிரவுக்குள் அணை தனது மொத்த கொள்ளளவான 120 அடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அணையிலிருக்கும் அனைத்து மதகுகளும் திறந்துவிடப்பட இருக்கின்றன. இதனால் சேலம், ஈரோடு தொடங்கி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம் வரை உள்ள காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.