திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (15:01 IST)

மேகதாது அணை விவகாரம்.! மாநில உரிமையை பாதுகாக்க வேண்டும்..! டிடிவி தினகரன்

ttv dinakaran
மேகதாது அணைக்கட்டு விவகாரத்தில் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தி மாநில உரிமையை பாதுகாக்க வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
 
இது குறித்து  தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், காவிரியின் குறுக்கே மேகதாது அணைகட்டும் பணிகளில் தீவிரம் காட்டும் கர்நாடக அரசின் பிடிவாதப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என கூறியுள்ளார். தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தி மாநில உரிமையை பாதுகாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.
 
கர்நாடக மாநில நிதி நிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்த அம்மாநில முதல்வர் சித்தராமையா, மத்திய அரசின் அனுமதியை பெற்று விரைவில் மேகதாது அணை கட்டப்படும் எனவும், அணை கட்டும் பணிகளை மேற்கொள்ள பிரத்யேக குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளதை டிடிவி தினகரன் சுட்டிக்காட்டி உள்ளார்.
 
karnataka cm
கடந்த பிப்ரவரி 1ம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக மேகதாது அணை குறித்து நடைபெற்ற விவாதத்தில் தமிழக அரசு அதிகாரிகள் பங்கேற்றது விவசாயிகளுக்கு இழைத்த மாபெரும் துரோகம் ஆகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
தமிழ்நாட்டின் ஜீவாதாரமான காவிரி நதிநீர் விவகாரத்தில், ஜெயலலிதா நடத்திய தொடர் சட்டப் போராட்டத்தினால் பெற்ற உரிமையை காக்க தவறிய திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் விவசாய சங்கங்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


எனவே, டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்க முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கையை சட்டரீதியாக தடுத்து நிறுத்துவதோடு, காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணைக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் ரத்து செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.