திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 1 டிசம்பர் 2023 (16:22 IST)

அதி தீவிர சிகிச்சை பிரிவில் தாய் அனுமதி; நடைபாதையில் கிடந்த ஒரு மாத குழந்தை! – சிவகங்கையில் அதிர்ச்சி!

Born Child
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி  மருத்துவமனையில் காரைக்குடியை சேர்ந்த பெண் ஒருவர் காய்ச்சல் பாதிப்பால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பெண்ணின் 1 மாத கைக்குழந்தையை அந்த வார்டின் வாயிலில் உள்ள நடைபாதையில் நோய் பரவும் அபாயத்துடன் காக்கவைத்துள்ள அவலம் நடந்தேறியுள்ளது.


 
காரைக்குடி மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் பாண்டி. இவர் கட்டிட தொழிலாளியாக இருந்து வருகிறார். இவருக்கு சிநேகா என்கிற பெண்ணுடன் திருமணமாகி தற்சமயம் தலைபிரசவம் பார்க்கப்பட்டு பெண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தை பிறந்து ஒரு மாதமே ஆகியுள்ள நிலையில் தற்சமயம் பெண்ணிற்கு திடிரென காய்ச்சல் ஏற்பட்டு காரைக்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த நிலையில் காய்ச்சல் தீவிரமடைய உடனடியாக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவர் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குழந்தை தாய்ப்பால் அருந்திவருவதால் குழந்தையையும் சிநேகாவின் பெற்றோர் உடன் அழைத்துவந்ததால் மருத்துவமனை ஊழியர்கள் அந்த குழந்தைக்கு உரிய பாதுகாப்பான இடம் அளிக்காமல் அந்த தீவிர சிகிச்சை பிரிவு வாயிலில் உள்ள நடைபாதை ஓரமாக தங்க வைத்துள்ளனர்.

இரண்டு நாட்களாக உரிய பாதுகாப்பின்றி நோய் பரவும் அபாயத்துடன் குழந்தை நடைபாதையில் தங்க வைக்கப்பட்டுள்ள சம்பவம் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் குழந்தைக்கு உரிய பாதுகாப்பான இடமளிக்க மருத்துவக்கல்லூரி நிர்வாகம் ஆவனம் செய்ய கோரிக்கைவிடுத்துள்ளனர்.