1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: ஞாயிறு, 4 ஜூன் 2017 (11:07 IST)

ரயில் நிலையத்தில் சூடு பிடிக்கும் கஞ்சா விற்பனை: பயணிகள் அவதி!

ரயில் நிலையத்தில் சூடு பிடிக்கும் கஞ்சா விற்பனை: பயணிகள் அவதி!

சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் சமீப காலமாக கஞ்சா விற்பனை மிகவும் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. இதனால் அங்கு ரயில் ஏற செல்லும் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.


 
 
கஞ்சா என்னும் போதைப்பொருளை விற்பது சட்டப்படி குற்றமாகும். இந்த குற்றச்செயலை மத்திய அரசுக்கு உட்பட்ட ரயில் நிலையத்தில் மிகவும் வெளிப்படையாக செய்து வருகின்றனர் கஞ்சா விற்பனையாளர்கள்.
 
சேத்துப்பட்டு ரயில் நிலைய தண்டவாளத்தின் அருகில் சில தினங்களுக்கு முன்னர் கஞ்சா விற்பனை நடைபெற்று வந்தது. இதனை இளைஞர்கள், சற்று வயதானவர்கள் என கூட்டம் கூட்டமாக சென்று வாங்கி வந்தனர். இதனால் ரயில் நிலையத்தில் பரபரப்பு நிலவியது. எங்கு இப்படி கூட்டமாக செல்கிறார்கள். ஏதாவது பிரச்சனையா என பயணிகள் ஒருவரை ஒருவர் கேட்டவாறு நின்றனர்.
 
ஆனால் அந்த ரயில் நிலையத்தில் உள்ள காவலர்களுக்கு நன்றாகவே தெரியும் அங்கு கஞ்சா விற்பனை நடைபெறுகிறது என்று. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று கஞ்சா விற்பனையானது ரயில் நிலையத்தின் உள்ளேயே நடைபெற்றதை காண முடிந்தது. ரயில் நிலையத்தின் உள்ளே நுழையக்கூடிய அந்த மேம்பாலத்தில் கஞ்சா விற்பனை சூடாக நடைபெற்றது.
 
ரயில் நிலையத்தில் டிக்கெட் விற்பனை செய்யும் இடத்தின் அருகிலேயே இந்த கஞ்சா விற்பனையும் நடைபெற்றது. ஒட்டுமொத்த வழியையும் அடைத்துக்கொண்டு கஞ்சா விற்பனையை செய்துகொண்டிருந்தனர் அவர்கள். எந்தவித பதற்றமும் இல்லாமல் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது கஞ்சா விற்பனை. ரயில்வே நிர்வாகமும் உள்ளூர் காவல்துறையும் என்ன செய்கிறது, இந்த சமூக விரோத கும்பலை கைது செய்து சிறையில் அடைக்காமல் பயணிகளுக்கு இடையூறும் ஏற்படுத்தி வருகின்றனர்.