கழிவறை இல்லாததால் பிரிந்து சென்ற காதல் மனைவி - வாலிபர் தற்கொலை
வீட்டில் கழிவறை இல்லாத காரணத்தால் மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் சேலம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் கோட்டகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் செல்லதுரை. பொறியியல் படித்த இவர் சேலத்தில் ஒரு தனியார் வணிக வளாகத்தில் பணிபுரிந்து வந்தார். அதே இடத்தில் பணிபுரிந்து வந்த தீபா என்கிறா பெண்ணுடன் அவருக்கு காதல் ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த 23ம் தேதி ஒரு கோவிலில் இருவருக்கும் திருமணம் நடந்தது. அன்று இரவு செல்லதுரை தனது மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது, வீட்டில் கழிவறை இல்லாதது கண்டு தீபா அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக செல்லதுரையிடம் சண்டை போட்டுள்ளார். அவர் எவ்வளவு சமாதானம் கூறியும் அதை அவர் ஏற்கவில்லை.
அடுத்த நாள் காலை வேலைக்கு செல்வதாக கூறிவிட்ட சென்ற தீபா வீடு திரும்பவில்லை. செல்லதுரை அவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, நான் என் சேலத்தில் என் உறவினர் வீட்டில் இருக்கிறேன். வீட்டில் கழிவறை கட்டிவிட்டு என்னை அழைத்து செல் என உறுதியாக கூறிவிட்டதாக தெரிகிறது.
எனவே, செல்லதுரையின் பெற்றோர்கள், இப்படிப்பட்ட பெண் என தெரியாமல் ஏன் அவளை திருமணம் செய்தாய்? என திட்டியுள்ளனர். இதனால் செல்லதுரை மணமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில், கடந்த 25ம் தேதி அவர் திடீரென காணாமல் போனார். எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் அவரின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில், வீட்டின் அருகே இருந்த கிணற்றில் அவரின் உடல் மிதந்தது கண்டு அவரின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். மனைவி பிரிந்து சென்ற துக்கத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
திருமணமான மூன்றே நாளில் செல்லதுரை தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.