1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 9 ஜனவரி 2018 (12:19 IST)

பட்டப்பகலில் மகள் கண் முன்னே தந்தை வெட்டிக் கொலை - சென்னையில் பயங்கரம்

தன்னுடைய மகளை கல்லூரிக்கு அழைத்து சென்ற நபரை பட்டப்பகலில் மர்ம கும்பல் வெட்டி சாய்த்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் கந்தன். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரின் மகள் கீர்த்தனா சென்னை அடையாறில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். 
 
இன்று காலை 7 மணியளவில் கீர்த்தனாவை கல்லூரியில் விடுவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் அவரை அழைத்து கொண்டு கந்தன் சென்று கொண்டிருந்தார். அப்போது, மேற்கு மாம்பலம் எல்லையம்மன் கோவில் அருகே வந்த போது, ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு மர்ம கும்பல் அவரை வண்டியை வழி மறித்தது. 
 
அதன் பின் கண் இமைக்கும் நேரத்தில் கந்தனை அந்த கும்பல் அரிவாள் போன்ற கொடூர ஆயுதங்களால் வெட்டியது. இது கண்டு அதிர்ச்சியடைந்த கீர்த்தனா அவர்களிடமிருந்து தந்தையை காப்பாற்ற முயன்றார். அதில், அவர் மீதும் வெட்டு விழுந்தது. அதன்பின் அந்த கும்பல் ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்று விட்டது.
 
இதில் கந்தன் அந்த இடத்திலேயே மரணம் அடைந்தார். தந்தையின் உடலை பார்த்து கீர்த்தனா கதறி அழுதார். தகவலறிந்த குமரன் நகர் போலீசார் விரைந்து வந்து கீர்த்தனாவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கந்தனின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 
 
தொழிற்போட்டி காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். சென்னையில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.