ஜெ.விற்கு வாரிசு இல்லை ; விரைவில் நினைவு இல்லம் : சென்னை கலெக்டர் பேட்டி
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேரடி வாரிசுகள் இல்லை என சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.
ஜெ.வின் மறைவிற்கு பின் அவர் வசித்து வந்த போயஸ் கார்டன் இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.
அந்நிலையில், அதற்கான பணிகளை தமிழக அரசு முடுக்கியுள்ளது. சமீபத்தில் மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை, நில அளவைத்துறை, தமிழ் வளர்ச்சித்துறை, செய்தி தொடர்பு துறை அதிகாரிகள் மற்றும் வருமான வரித்துறையினர் ஆகியோர் ஜெ.வின் வீட்டிற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது, நினைவு இல்லத்தை எப்படி அமைப்பது என்பது பற்றி ஆலோசனையும் செய்தனர்.
இந்நிலையில், இதுபற்றி இன்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் “ஜெ.வின் இல்லத்தை நினைவிடமாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஜெ.விற்கு நேரடி வாரிசுகள் யாரும் இல்லை. வருமான வரி சோதனை நினைவு இல்லமாக்கும் பணியை பாதிக்காது. இன்னும் 4 மாதத்தில் நினைவு இல்லம் தொடர்பான பணிகள் முடிந்துவிடும் ” என அவர் தெரிவித்தார்.
மேலும், வருமான வரித்துறையினர் சீல் வைத்த அறைகளை தாங்கள் திறக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.