ஆன்லைன் ரம்மி விளையாட்டு… 7 லட்சம் தோல்வி – இளைஞர் எடுத்த அதிரடி முடிவு!
ஆன்லைனில் ரம்மி விளையாடி பணம் தோற்ற இளைஞர் ஒருவர் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சமீபகாலமாக ஆன்லைன் சூதாட்டங்களில் பணத்தை இழந்து இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகமாகியுள்ளது. இந்நிலையில் கோவையை சேர்ந்த இளைஞர் ஒருவரும் அதுபோல பணத்தை இழந்து தற்கொலை செய்துகொண்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, ஆவாரம்பாளையம், இளங்கோ நகரைச் சேர்ந்தவர் எல்வின் பிரட்ரிக் என்ற இளைஞர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஆன்லைனில் ரம்மி விளையாடியுள்ளார். இது சம்மந்தமாக குடும்பத்தினருடன் அடிக்கடி சண்டை போட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதி அவர் திடீரென காணாமல் போயுள்ளார்.
இது சம்மந்தமாக போலீஸில் குடும்பத்தினர் புகார் அளிக்க, அவர்கள் தேடியுள்ளனர். விசாரணையில் திருப்பூரில் ஊத்துக்குளி சாலையில் உள்ள கொங்கு பிரதான சாலை பகுதி அருகே தண்டவாளத்தில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அது பிரட்ரிக்தான் என்பது தெரியவந்துள்ளது. அவர் கடந்த 5 ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார் என்ற விவரம் வெளியாகியுள்ளது.
விசாரணையில் இவர் ஆன்லைன் சூதாட்டத்தில் 7 லட்ச ரூபாய் வரை இழந்ததாகவும், அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை முடிவை எடுத்ததாகவும் தெரிய வந்துள்ளது.