வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 23 ஆகஸ்ட் 2016 (19:03 IST)

புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் : ஜெ.வுக்கு எதிராக கட்சி தொடங்கிய மதுரை "எம்.ஜி.ஆர்."

புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் : ஜெ.வுக்கு எதிராக புதிய கட்சி

அதிமுகவுக்கு இது சோதனைக் காலம்தான்.... தாம் ராஜினாமா செய்ய உத்தரவிட்டபோதும் அதெல்லாம் முடியாது என்று ஜெயலலிதாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர் சசிகலா புஷ்பா எம்.பி... 


 

 
இப்போது எம்.ஜி.ஆர். ரசிகர்கள் புறக்கணிக்கப்படுகிறோம் என கூறி மதுரையில் அதிமுக பிரமுகர் ஒருவர் ஜெயலலிதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து "புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்" என்ற கட்சியையே தொடங்கியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. 
 
மதுரையைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி. அச்சு அசல் எம்.ஜி.ஆரைப் போன்ற தோற்றம் கொண்டவர். இவர் 'சக்கரவர்த்தி திருமகன்' என்ற எம்ஜிஆர் படத்தின் தலைப்பில் தானே கதாநாயகனாக நடித்து திரைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார். 
 
அதிமுகவில் உறுப்பினராக இருக்கும் இந்த சக்கரவர்த்திதான் "புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்" என்ற கட்சியை அதிரடியாக தொடங்கியுள்ளார். தாம் 30 ஆண்டுகாலமாக அதிமுகவில் இருந்த போதும் வட்டச் செயலர் பதவி கூட வழங்கப்படவில்லை. அதிமுகவில் உள்ள எம்ஜிஆர் அபிமானிகளுக்கு இப்படித்தான் மரியாதை இருக்கிறது. ஆகையால் புறக்கணிக்கப்பட்ட எம்ஜிஆர் அபிமானிகளை ஒருங்கிணைக்க இப்புதிய கட்சி என்கிறார் சக்கரவர்த்தி. 
 
மேலும் எம்.ஜி.ஆருக்கு நிரந்தரமான புகழை தந்திருப்பது சத்துணவுத் திட்டம். அந்த திட்டத்தினால் எம்.ஜி.ஆருக்கு கிடைக்கும் புகழை இருட்டடிப்பு செய்வதற்காக இன்றைய அரசு சத்தமில்லாமல் ஒருவேலையை செய்துவருகிறது. 
 
அந்த துறையில் பல திட்டங்களுக்கு பணம் ஒதுக்கப்படுவதில்லை. அல்லது ஒதுக்கப்பட்ட நிதியை இதுவரை தராமல் இழுத்தடிப்பு செய்துவருகிறார்கள். இதனால் திட்டம் பாழாகி, அதை தமது பெயரில் வேறு ஒரு திட்டமாக மாற்றுவதே ஜெயலலிதாவின் நோக்கம் என்றெல்லாம் அதிரடி காட்டுகிறார் சக்கரவர்த்தி.