1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 27 மே 2020 (08:34 IST)

பணத்திற்காக விற்பனை செய்யப்பட்ட குழந்தை: ஒருமணி நேரத்தில் மீட்ட கலெக்டர்

பணத்திற்காக விற்பனை செய்யப்பட்ட குழந்தை
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பணத்திற்காக விற்பனை செய்யப்பட்ட குழந்தை குறித்த புகார் வந்த அடுத்த ஒரு மணி நேரத்தில் கலெக்டர் அந்த குழந்தையை கண்டு பிடித்து உரியவரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த அஷ்ரப் அலி என்பவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்றுவிட்டதால் இரண்டு பெண் குழந்தையை வளர்க்க அஷ்ரப் அலி கஷ்டப்பட்டுள்ளார். இதனை அடுத்து ஒரு பெண் குழந்தையை குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் சேர்க்க உதவி செய்யுமாறு தனது நண்பரிடம் கேட்டுக்கொண்டார்
 
இதனை பயன்படுத்திக் கொண்ட அந்த நண்பர் அந்த குழந்தையை காப்பகத்தில் சேர்த்ததாக கூறிவிட்டு ஒன்றரை லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் காப்பகத்தில் சேர்க்கப்பட்ட குழந்தையை பார்க்க வேண்டுமென்று அஷ்ரப் அலி நண்பரிடம் கூறியுள்ளார். ஆனால் அவரது நண்பர் பலமுறை தட்டிக் கழித்த நிலையில் அதன் பின்னர் மதுரையில் உள்ள ஒரு இடத்தில் குழந்தை இருப்பதாக கூறி முகவரியை கொடுத்துள்ளார் 
 
அந்த முகவரிக்கு நாகப்பட்டினத்தில் இருந்து நடந்தே சென்ற அஷ்ரப் அலி, அவர் கொடுத்த முகவரியில் குழந்தை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே போன் மூலம் இது குறித்து தனது நண்பரிடம் கேட்டபோது குழந்தையை விற்று விட்டதாகவும் இதை வெளியே கூறினால் போலீசிடம் புகார் அளித்து விடுவதாக மிரட்டியுள்ளார் 
 
இதனை அடுத்து மதுரை கலெக்டர் அலுவலகம் சென்று கலெம்டரிடம் நடந்ததைக் கூறியுள்ளார். மதுரை கலெக்டர் காவல்துறை உயர் அதிகாரிகளை அழைத்து உடனடியாக அந்த குழந்தையை கண்டு பிடிக்கும்படி உத்தரவிட்டார். கலெக்டரின் உத்தரவின் பேரில் அவரது நண்பரிடம் விசாரணை செய்த போலீசார் அடுத்த ஒரு மணி நேரத்தில் குழந்தை இருக்கும் இடத்தை கண்டுபிடித்து வீடியோகால் மூலம் தந்தையுடன் பேச வைத்துள்ளனர்
 
விரைவில் சட்டபூர்வமான நடவடிக்கை முடிந்த பின் தந்தையுடன் அந்த பெண் குழந்தை அனுப்பி வைக்கவும் கலெக்டர் உறுதி அளித்துள்ளார். இதனை அடுத்து தந்தை புகார் கொடுத்த ஒரு மணி நேரத்தில் குழந்தையை கண்டுபிடிக்க உதவிய மதுரை கலெக்டருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது