1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: செவ்வாய், 14 ஜூன் 2016 (15:20 IST)

ஜெயலலிதாவுக்கு மு.க.ஸ்டாலின் திடீர் கோரிக்கை

ஜெயலலிதாவுக்கு மு.க.ஸ்டாலின் திடீர் கோரிக்கை

மருத்துவ நுழைவு தேர்வினை நிரந்தரமாக ரத்து செய்ய தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என முதல்வர் ஜெயலலிதாவுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

 
இது குறித்து, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தை பொறுத்த வரை, 2006 -ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற திமுக அரசு சமூகநீதியை பாதுகாக்கும் வகையிலும், கிராப்புற ஏழை மாணவர்களின் உயர்கல்வி பாதிக்கப்படாத வகையிலும் மருத்துவம் மற்றும் பொறியியல் தொழிற்கல்விக்கான நுழைவு தேர்வு முறையை முற்றிலுமாக ரத்து செய்தது. 
 
இதன் காரணமாக பிற்படுத்தப்பட்ட-மிக பிற்படுத்தப்பட்ட-தாழ்த்தப்பட்ட-பழங்குடி-சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களும் கிராமப்புற ஏழை மாணவர்களும் இன்று டாக்டர்களாகவும், இன்ஜினியர்களாகவும் உருவாகி இருக்கின்றனர். 
 
இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, அடுத்த ஆண்டு முதல் மருத்துவக் கல்விக்கான நுழைவு தேர்வினை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு மாணவர்கள் ஆளாகியிருக்கிறார்கள்.
 
மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்ததன் மூலம் இந்த ஆண்டிற்கான நுழைவு தேர்வு தற்காலிகமாக அரைகுறையாக தடுக்கப்பட்டு இருக்கிறது. இது மாணவர்களுக்கான முழுமையான பலனை எதிர்காலத்தில் நிச்சயம் தராது. 
 
குறிப்பாக தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட-மிகபிற்படுத்தப்பட்ட-தாழ்த்தப்பட்ட-பழங்குடி-சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்தவர்கள், கிராமப்புற ஏழை மாணவர்கள், தமிழ் வழிக் கல்வியில் பயில்வோர் உள்ளிட்ட பல தரப்பினருக்கும் இந்த நுழைவுத் தேர்வு மிகுந்த நெருக்கடியையும் பின்னடைவையும் உண்டாக்கி, அவர்களின் கல்விக் கனவையும் எதிர்காலத்தையும் சிதைக்கக்கூடியதாகும்.
 
திராவிட இயக்கங்களால், குறிப்பாக திமுக அரசின் முயற்சியால் கல்வியிலும்,வேலைவாய்ப்பிலும் நிலை நிறுத்தப்பட்டுள்ள சமூகநீதிக்கு சிறிதளவும் பங்கம் வராத வகையில், ”நீட்” தேர்வை மத்திய அரசு தமிழகத்தைப் பொறுத்தவரை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் தீர்மானத்தினை தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்து, உரிய விவாதம் நடத்தி, அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் தீர்மானத்தினை ஒருமனதாக நிறைவேற்றி, அதனை மத்திய அரசுக்கு அனுப்பி உரிய ஆணையைப் பெறத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து நுழைவுத் தேர்வே தமிழகத்தில் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதாவை கேட்டுக் கொண்டுள்ளார்.