1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: வியாழன், 16 ஜூலை 2015 (18:02 IST)

திமுகதான் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வந்தது, இதில் நான் பேசுவது தவறு என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க தயாரா? - மு.க.ஸ்டாலின்

திமுகதான் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வந்தது. இதில் நான் பேசுவது தவறு என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க தயாரா? மெட்ரோ ரயிலை யார் கொண்டு வந்தது என கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தால் சட்டசபையில் மெட்ரோ ரயில் பற்றி ஜெயலலிதா பேசிய பேச்சை நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் வெளியிடுவேன் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
 
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவாலயத்தில் பேட்டியளில் கூறியதாவது, 
 
கே: மெட்ரோ ரயில் திட்டத்தை திமுக கொண்டு வந்ததாக நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வந்ததற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் ஆலந்தூரில் நேற்று நடந்துள்ளது. அதில் 7 அமைச்சர்கள் பங்கேற்று ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்து பேசி இருக்கிறார்களே?
 
ப: மெட்ரோ ரயில் திட்டத்தை திமுகதான் கொண்டு வந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். இதற்காக அப்போது ஜப்பான் நாட்டுக்கு சென்று நிதி உதவி பெற்று வந்தேன். இந்த திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி தொடங்கவும் வைத்தேன்.
 
அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதா சட்டசபையில் மெட்ரோ ரயிலை விட மோனோ ரயில் தான் சென்னைக்கு உகந்தது என்று பேசினார். அவரது பேச்சை சட்டசபை அவைக் குறிப்பில் இருந்து எடுத்து வந்து ஆலந்தூரில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் விரிவாக பேசினேன்.
 
நான் சொன்ன கருத்து அனைத்தும் ஜெயலலிதா சட்டசபையில் ஆதாரப் பூர்வமாக பேசிய பேச்சு தான்.
 
திமுகதான் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வந்தது. இதில் நான் பேசுவது தவறு என்றால் கோர்ட்டில் வழக்கு தொடுக்க தயாரா? மெட்ரோ ரயிலை யார் கொண்டு வந்தது என கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தால் சட்டசபையில் மெட்ரோ ரயில் பற்றி ஜெயலலிதா பேசிய பேச்சை நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் வெளியிடுவேன்.
 
கடலூரில் 18 ஆம் தேதி திமுக சார்பில் நீதி கேட்கும் பேரணி பொதுக் கூட்டம் பிரம்மாண்டமாக நடக்கிறது. இதில் அதிமுக அரசு மீது புதிய குற்றச்சாட்டுகளை வெளியிடுவேன் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.