1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 10 டிசம்பர் 2024 (11:32 IST)

தாமதமாகிறதா காற்றழுத்த தாழ்வு: இந்திய வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?

வங்கக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று கணித்திருந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து, இன்று, அதாவது டிசம்பர் 10ஆம் தேதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் கடந்த 24 மணி நேரமாக ஒரே இடத்தில் நகராமல் காற்றழுத்த தாழ்வு பகுதி இருக்கும் நிலையில், தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை, அதாவது டிசம்பர் 11ஆம் தேதியன்று, புயல் சின்னம் வலுப்பெற கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்றும் நாளையும் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில், குறிப்பாக திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை, டிசம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


Edited by Siva