1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 4 ஜூன் 2015 (09:48 IST)

தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்தவர் கைது

திருவள்ளூரில், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை  விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
கேரள மாநில அரசு லாட்டரி சீட்டுகளை வெளியிட்டு வருகிறது. விசேஷ நாட்களில் சிறப்பு பம்பர் குலுக்கல்களும் நடத்தப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் லாட்டரி சீட்டுகளை, தமிழக அரசு தடை செய்துள்ளது. மேலும், நேரடியாகவே அல்லது மறைமுகவோ லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும்.
 
இந்நிலையில், திருவள்ளூர் பஜார் வீதி, பஸ் நிலையம், ஆசூரி தெரு, சி.வி.நாயுடு சாலை, ஜே.என்.சாலை போன்ற பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. இது குறித்து ரகசிய தகவல், திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் இளங்கோவுக்கு கிடைத்தது.
 
இதனையடுத்து, காவலர்கள் உதவியுடன் திருவள்ளூர் பஜார் வீதி, பஸ் நிலையம், ஆசூரி தெரு, சி.வி.நாயுடு சாலை, ஜே.என்.சாலை போன்ற பகுதிகளில் தீவிர ரோந்துப்பணியில்,  நகர காவல் ஆய்வாளர் இளங்கோ ஈடுபட்டார். 
 
அப்போது, காவலர்களை கண்டதும் ஒருவர் கையில் பையுடன் ஓட்டம் எடுத்தார். இதனால், சந்தேகம் அடைந்த காவல்துறையினர், திருவள்ளூர் ஜெயநகரை சேர்ந்த மணி (35) என்ற அந்த நபரை விரட்டிப்பிடித்து, அவரை சோதனை செய்த போது, அவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை பையில் வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.