1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 10 மே 2016 (01:02 IST)

சூரிய ஒளி மின்சாரம் கொள்முதலில் அரசுக்கு 7,576 கோடி ரூபாய் நஷ்டம்: கருணாநிதி குற்றச்சாட்டு

சூரிய ஒளி மின்சாரம் கொள்முதலில் அரசுக்கு 7,576 கோடி ரூபாய் நஷ்டம்: கருணாநிதி குற்றச்சாட்டு

தமிழக அரசு அதானி நிறுவனத்திடம் இருந்து, சூரிய ஒளி மின்சாரம் கொள்முதல் செய்யும் போக்கு காரணமாக, அரசுக்கு 7,576 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக  கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
 

 
இது குறித்து, திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
தமிழகத்தில் மின்சார வாரியத்திற்காக நிலக்கரி வாங்குவதில் எந்த அளவுக்கு ஊழலும் முறைகேடுகளும் நடைபெற்றன என்று விரிவாக நான் தெரிவித்ததற்கு எந்த விதமான பதிலும் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்தோ அல்லது, அந்த துறை அமைச்சரிடமிருந்தோ இதுவரை பதில் வரவில்லை.
 
அதை, இப்போது சொல்லாவிட்டாலும், தேர்தலுக்குப்பிறகு, இந்த ஊழல்கள் குறித்து விசாரணைக்கமிஷன் அழைத்துக் கேட்கும்போது பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.
 
அது நிலக்கரி ஊழல். அதே மின்சார வாரியத்தில் சூரிய ஒளி மின்சாரம் வாங்குவதிலே தமிழக அரசுக்கு 7,576 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
 
கடந்த 4-7-2015 அன்று முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதானி குழுமத்துடன் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஒப்பந்தம் செய்து கொண்டது.
 
தமிழக அரசு அதானி குழுமத்துடன் 4,536 கோடி ரூபாய் செலவில், ஒரு யூனிட் ரூபாய் 7.01 என்ற விகிதத்தில் 25 ஆண்டுகளுக்கு மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தம் முடிந்த இரண்டே வாரங்களில், மத்தியப் பிரதேச அரசு சூரிய ஒளி மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்தபோது தான் குற்றச்சாட்டுகள் கிளம்பின. மத்தியபிரதேச அரசுக்கு ஒரு யூனிட் ரூபாய் 6.04 என்ற விலையில் சூரிய ஒளி மின்சாரம் வழங்க இதே அதானி நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
 
ஆனால், அதானி நிறுவனத்தின் இந்த விலைப்புள்ளியை நிராகரித்த மத்தியப்பிரதேச அரசு, மொரீஷியஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்கை பவர் சவுத் ஈஸ்ட் ஏஷியா என்ற நிறுவனத்தோடு, ஒரு யூனிட் 5.05 என்ற விலையில், 25 ஆண்டுகளுக்கு மின்சாரம் வாங்க ஒப்புதல் அளித்தது உண்மையா இல்லையா?
 
மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராக இருந்த நாகல்சாமி, இந்த ஒப்பந்தம் நடந்த போதே, இந்த ஒப்பந்தத்தினால் அடுத்த 25 ஆண்டுகளில் தமிழக அரசு 25 ஆயிரம் கோடி இழப்பைச் சந்திக்கும் என்று கூறினார்.
 
ஆனால் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்து எதிர்ப்புகளையும் அலட்சியப்படுத்தி விட்டு ஒப்பந்தத்தைச் செயல்படுத்தி வருகிறது தமிழக அரசு. 947 மெகாவாட் மின்சாரத்தை இந்த விலைக்குக் கொள்முதல் செய்தால் அரசுக்கு 7,576 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என குற்றம் சாட்டியுள்ளார்.