வேன் மீது லாரி மோதியதில் விபத்து; சிறுவன் பலி : கரூரில் பயங்கரம்
கரூரில் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த வேன் மீது பின்னால் வந்த தக்காளி ஏற்றி வந்த லாரி மோதி கவிழ்ந்த விபத்தில் ஒரு சிறுவன் பரிதாபமாக பலியானான். மேலும், ஓட்டுநர் உள்ளிட்ட 15 பேர் காயம் அடைந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை அடுத்த திருமுல்லைவாடி கிராமத்தைச் சார்ந்த 20க்கும் மேற்பட்டோர் வேனில் ராமேஸ்வரம் நோக்கி சேலம் - கரூர் தேசிய நெ்ஞ்சாலை எண் 7ல் பயணம் சென்று கொண்டிருந்தனர்.
கரூரை அடுத்த தூளிபட்டி அருகே வந்த போது வேனில் பயணம் செய்தவர்கள் ஒரு சிலர் சாலையோரத்தில் வேனை நிறுத்திவிட்டு டீ குடித்துள்ளனர். அப்போது தர்மபுரி மாவட்டத்திலிருந்து திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடிக்கு தக்காளி ஏற்றிக் கொண்டி சென்ற லாரி, நின்னு கொண்டிருந்த வேன் மீது பலமான மோதி சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
லாரி மோதிய வேகத்தில் நின்று கொண்டிருந்த வேன் பள்ளத்தில் இறங்கி முன்னால் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
அவர்களை ரோந்து சென்ற போலீசார் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அனில்குமார் என்ற 15 வயது சிறுவன் உயிரிழந்தார். மேலும், லாரி ஓட்டுநர் சரத்குமார், அவரது உதவியாளர் செந்தில்குமார், வேனில் பயணம் செய்தவர்கள் என 13 பேர் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், சாலையில் டன் கணக்கில் தக்காளி கொட்டிக் கிடப்பதால் அவற்றை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்து குறித்து வாங்கல் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சி.ஆனந்தகுமார் - செய்தியாளர்