வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (13:47 IST)

வளர்ப்பு நாய் கடித்து சிறுமி காயம்.! நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி.!!

Dog Bite
ஆவடி அருகே வளர்ப்பு நாய் கடித்து சிறுமி காயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
ஆவடி அடுத்த அயப்பாக்கம் ECI சர்ச் பகுதியில் வசித்து வந்தவர்கள் சீனிவாசன் - உஷா. இவர்களின் மகள் ரக்க்ஷிதா 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் அந்த பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் அங்கிருந்து காலி செய்து அதே தெருவில் குடிபெயர்ந்து உள்ளனர் . 
 
இந்த நிலையில் கடந்த 7ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று ஏற்கனவே குடியிருந்து வந்த வீட்டிற்கு பலகாரங்கள் எடுத்துகொண்டு ரக்க்ஷிதா வந்துள்ளார். அப்பொழுது அங்குள்ள வீட்டில்   லாப்ரடர் வகை நாய் நீண்ட நாட்களாக வளர்த்து வருகின்றனர். நாயை கட்டாத நிலையில், வீட்டின் வெளிப்புறம் அங்கு தெரு நாய்களுடன் படுத்து கொண்டு இருந்துள்ளது.

திடீரென அந்த நாய் சிறுமி ரக்க்ஷிதா மீது பாய்ந்து கையில் பயங்கரமாக கடித்துக் குதறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி பயத்தில் அலறியபடி நின்றுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் நாயிடமிருந்து சிறுமியை மீட்டனர்.
 
இதில் சிறுமி ரக்க்ஷிதாவிற்கு கையில் நாயின் பல் பலமாக பதிந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுமியை நாய் கடிக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே அப்பகுதியில் அந்த வளர்ப்பு நாயை முறையாக கட்டிப் போடுவதில்லை என்றும், சாலையில் சுற்றித் திரிவதால் அந்த பகுதியில் கடந்து செல்ல மக்கள் அச்சமாக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே அந்த நாய் ஒருவரை கடித்திருப்பதாகவும் கூறுகின்றனர்.

இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க, நாயின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.