வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 14 டிசம்பர் 2016 (11:11 IST)

ஜெ. பற்றிய தகவலை வெளியிட்டால் குழப்பம் ஏற்படும்: அப்பல்லோ சர்வரில் ஊடுருவிய ஹேக்கர்கள்!

ஜெ. பற்றிய தகவலை வெளியிட்டால் குழப்பம் ஏற்படும்: அப்பல்லோ சர்வரில் ஊடுருவிய ஹேக்கர்கள்!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். அவரது உடல் உடனடியாக அடுத்த நாளே அடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகிறது.


 
 
ஜெயலலிதா மரணம் குறித்தான முழு விபரம் இன்று வரை பொதுமக்களுக்கு சொல்லப்படவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்களுக்கு பின்னர் தான் அவர் இறந்ததாக அறிவித்தனர். ஆனால் இந்த இடைப்பட்ட காலத்தில் அவரை பார்க்க ஆளுநர் உட்பட யாரையும் அனுமதிக்கவில்லை.
 
இதனையடுத்து ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் மர்ம உடைக்கப்பட வேண்டும் என பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் லெஜியன் என்ற ஹேக்கர்கள் குழு அப்பல்லோ மருத்துவமனை சர்வரில் புகுந்து ஜெயலலிதா குறித்தான தகவல்களை திருடியுள்ளதாக கூறியுள்ளது.
 
இந்த லெஜியன் ஹேக்கர்கள் இதற்கு முன்னர் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, தொழிலதிபர் விஜய் மல்லையா போன்றோரின் டுவிட்டர் கணக்குகளை ஹேக் செய்தவர்கள். தற்போது அப்பல்லோ சர்வரில் புகுந்து ஜெயலலிதா குறித்த தகவல்களை திருடியுள்ளதாக அமெரிக்காவில் வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் லெஜியன் ஹேக்கர்கள் குழு அளித்த பேட்டியில் கூறியுள்ளது.
 
அப்பல்லோ சர்வரில் இருந்து பெறப்பட்ட தகவல்களை ஆராய்ந்ததில் பாதிக்கும் மேற்பட்ட தகவல்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய முடியவில்லை. அப்பல்லோ சர்வரில் கிடைத்த தகவல்களில் ஜெயலலிதா குறித்தான பல தகவல்கள் உள்ளன எனவும் அவற்றை வெளியிட்டால் இந்தியாவில் குழப்பம் ஏற்படும் என அந்த ஹேக்கர்கள் குழு பேட்டியளித்துள்ளது.