1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 2 செப்டம்பர் 2015 (13:06 IST)

மனு கொடுக்க வந்தவரை கன்னத்தில் ’பளார் விட்ட’ பெண் எஸ்.ஐ.

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பெண் காவல் ஆய்வாளர் வேலூர் ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தவரின் கன்னத்தில் அறைந்து வெளியேற்றியுள்ளார்.
 
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த நாட்றம்பள்ளியைச் சேர்ந்த சேகர் (36) என்பவர் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மனு கொடுக்க வந்துள்ளார். அப்போது பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் கன்னத்தில் அறைந்ததோடு, அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளார்.
 
இது குறித்து மனு கொடுக்க வந்த சேகர் கூறுகையில், கடந்த 2001ஆம் ஆண்டு கலப்புத் திருமணம் செய்துகொண்டதாகவும், பின்னர் தனக்கும் தனது மனைவிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதால் மனைவி குழந்தைகளோடு தாய்வீடு சென்று விட்டதாகவும் கூறியுள்ளார்.
 
மேலும், கலப்புத் திருமணம் செய்துகொண்டதால் சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் உள்ளவர்கள் மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டதாகவும், இதனால், தனக்கு தொல்லை கொடுக்கும் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி புகார் தெரிவிக்க வந்ததாகவும் கூறியுள்ளார். 
 
இதுவரை 6 முறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், 7ஆவது முறையாக புகார் அளிக்க வந்துள்ளார். அப்போதுதான், வேலூர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் செல்வி, ‘எத்தனை முறைதான் மனு கொடுப்பாய்’ எனக் கூறி தடுத்துள்ளார்.
 
அதனையும் மீறி செல்ல முயன்ற போது கன்னத்தில் அறைந்துள்ளார். பின்னர், வலுக்கட்டாயமாக அவரை வெளியேற்றியுள்ளார். மனு கொடுக்க வந்தவரை பெண் காவல் ஆய்வாளர் கன்னத்தில் அறைந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.