ரஜினிக்கிட்ட பேசறதே வேஸ்ட்; அவர் பேச்சை யாரும் கேக்க மாட்டாங்க! – கே.எஸ்.அழகிரி
நடிகர் ரஜினிகாந்தை இஸ்லாமிய அமைப்புகள் சந்தித்து பேசிய நிலையில் அதனால் எந்த பயனும் இல்லை என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் இஸ்லாமிய அமைப்புகள் சில சிஏஏ-வுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் சிஏஏ குறித்து நடிகர் ரஜினிகாந்த் ஆதரவாக பேசி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனால் சிஏஏவால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்படுவது குறித்து இஸ்லாமிய அமைப்பின் தலைவர்கள் சிலர் ரஜினியை நேரில் சந்தித்து விளக்கமளித்தனர்.
இஸ்லாமிய அமைப்புகளின் சந்திப்புக்கு பிறகு நாட்டின் அமைதிக்காக தன்னால் ஆனதை செய்வதாக ரஜினிகாந்த் தெரிவித்தார். மேலும் ரஜினி இதுகுறித்து பிரதமர் மோடியிடம் சந்தித்து பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ரஜினி – இஸ்லாமிய அமைப்புகள் சந்திப்பு குறித்து பேசியுள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ”இஸ்லாமிய அமைப்புகள் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசுவது பயனற்ற செயல். பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ரஜினிகாந்தின் பேச்சை கேட்கமாட்டார்கள்” என்று கூறியுள்ளார்.