1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : ஞாயிறு, 2 அக்டோபர் 2016 (12:36 IST)

ஜெ. ஆடியோ கேட்க கருணாநிதிக்கு உரிமை கிடையாது: பண்ருட்டி அதிரடி

ஜெயலலிதாவின் படத்தையோ, அல்லது ஆடியோவை வெளியிடவேண்டும் என்று கோருவதற்கு கருணாநிதிக்கு எந்த உரிமையும் கிடையாது என்று அதிமுக செய்தி தொடர்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
 

 
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 10 நாட்களாக தொடர்ந்து அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
 
அவர் நலமுடன் இருப்பதாக அவ்வப்போது, மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வந்தது. அவருக்கு சுவாச பிரச்சனை இருப்பதாகவும், இதனால் இன்னும் சில நாட்கள் அவர் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் என்று தற்போது மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
 
ஒருபக்கம், முதல்வரின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது. இதை மருத்துவமனை நிர்வாகம் மற்றும் அதிமுகவினர் மறுத்தாலும், முதல்வரின் ஜெயலலிதா சிகிச்சை எடுத்துக் கொள்ளும் புகைப்படம் கூட இன்னும் வெளியாகவில்லை.
 
இதனால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், தமிழக அரசியல் வட்டாரத்திலும் பதட்டமான, பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால், அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் தமிழக அமைச்சர்கள் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர்.
 
இந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், ’’ஜெயலலிதா நன்கு குணமடைந்து வருகிறார். விரைவில் அவர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கிறோம். வீணாக பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்பவேண்டாம்.
 
லண்டனை சேர்ந்த டாக்டர் அவருடைய சிகிச்சையை தொடங்கியுள்ளார். அவர் அளித்து வரும் சிகிச்சை திருப்திகரமாக உள்ளது. சிகிச்சைபெறும் ஜெயலலிதாவை தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக நான் அவரை சந்திக்கவில்லை’ என்றார்.
 
மேலும், செய்தியாளர்கள் அவரிடம், ‘தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆஸ்பத்திரியில் சிகிச்சைப் பெறும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் படத்தையோ, அல்லது ஆடியோவை வெளியிடவேண்டும் என்று கூறியுள்ளாரே?’ என்று கேள்வி எழுப்பினர்.
 
அதற்கு பதிலளித்த அவர், ‘இந்த கோரிக்கையை வைப்பதற்கு கருணாநிதிக்கு எந்த உரிமையும் கிடையாது. முதலமைச்சரின் உடல்நிலை குறித்து டாக்டர்களால் மட்டுமே கருத்து கூறமுடியும்.
 
டாக்டர்களும் அவ்வப்போது ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் உடல்நிலை குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பேசுவதற்கு உரிமை இல்லை’ என்றார்.