‘விகிதாச்சார பிரதிநிதித்துவ’ முறையையும் மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல்

 Karunanidhi
Suresh| Last Modified திங்கள், 2 பிப்ரவரி 2015 (14:15 IST)
இந்தியாவில் பலராலும் வலியுறுத்தப்பட்டு வரும் ‘விகிதாச்சார பிரதிநிதித்துவ’ முறை பற்றியும் மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டுமென்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பவர்களுக்கு இரண்டாண்டு சிறை தண்டனை வழங்கும் வகையில் மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வரப்போவதாக இன்றைய நாளேடுகளில் செய்தி வந்துள்ளது.

இந்தச் சட்டத் திருத்தம் வருகின்ற நேரத்தில் இந்தியாவில் பல்லாண்டுகளாகப் பலராலும் சொல்லப்பட்டு வருகின்ற “விகிதாச்சார பிரதிநிதித்துவ“ முறை பற்றியும் மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். ஏற்கனவே நான் இதுபற்றி கூறும்போது, “உலகத்தில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்க நாடுகள் நீங்கலாக, ஏனைய நாடுகள் பலவும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையைத் தான் கடைப்பிடிக்கின்றன.
அந்த முறைப்படி தேர்தல் நடைபெறும்; கட்சிகள் போட்டியிடும். தேர்தலில் கட்சிகள் பெறும் வாக்கு வீதத்துக்கு ஏற்ப, நாடாளுமன்றத்தில் அந்தக் கட்சிகளுக்குப் பிரதிநிதித்துவம் கிடைக்கும். தொகுதிகளுக்கான உறுப்பினர்களை, கட்சி தேர்வு செய்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பும். இப்படிப்பட்ட ‘விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை‘ (Proportional Representation) தான் கடைப்பிடிக்கப்பட வேண்டுமென்று அண்ணா அவர்கள் திரும்பத் திரும்பச் சொன்னார்கள். இதுவரை ஏற்றுக் கொள்ளப்படாத இந்தக் கருத்து இப்போது பல தேசியக் கட்சிகளாலும் வலியுறுத்தப் படுகிறது“ என்று நான் தெரிவித்ததையும் ஆழ்ந்து பரிசீலனை செய்திட வேண்டுமென விரும்புகிறேன்.
குறிப்பாக முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரும், நேர்மையான அதிகாரியாக இருந்து மிகச் சிறப்பாகத் தேர்தல் பணியாற்றியவர் என்று அனைவராலும் பாராட்டப்பட்டவருமான ஜே.எம். லிங்டோ, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்குத் தேர்தல் ஆணையம் தற்போது பிரசாரச் செலவுக்கான உச்ச வரம்பை நிர்ணயித்துள்ளது. எனினும், அந்த அளவைத் தாண்டி வேட்பாளர்கள் செலவு செய்வதால், தேர்தல் செலவுக்கான உச்ச வரம்பு என்பதே கேலிக் கூத்தாகி விட்டது. எனவே தற்போதுள்ள தேர்தல் நடைமுறையை மாற்ற வேண்டும்.
இதில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை மிகவும் சிறப்பானதாக இருக்கும். அந்த முறை கொண்டு வரப்பட்டால் தேர்தலில் யாரும் பெரும் தொகையைச் செலவு செய்ய மாட்டார்கள். விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் அரசியல் கட்சிகள் தான் போட்டி யிடும்; வேட்பாளர்கள் யாரும் போட்டியிட மாட்டார்கள். இதனால் தேர்தலில் பண பலத்தின் தாக்கம் குறையும். எனவே, அந்த முறையை அறிமுகம் செய்வது குறித்து நாம் முயற்சித்துப் பார்க்கலாம்“ என்று லிங்டோ தன்னுடைய நீண்ட அனுபவத்தின் அடிப்படையில் தெரிவித்திருக்கும் கருத்துகள் மத்திய அரசு சீரிய கவனத்தில் கொள்ள வேண்டியவை.

எனவே வருகின்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் மத்திய அரசு இதற்கான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வரும்போது, என்னுடைய இந்தக் கருத்துகளையும் மனதிலே கொண்டு, விரிவான விவாதத்துக்கு வழி வகுத்து, நேர்மையான, முறையான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்து நடைமுறைப்படுத்த வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகின்றேன் என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :