திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 18 ஜூன் 2016 (12:05 IST)

’கலைஞர் சட்டசபை வந்து செல்ல வாய்ப்பு இல்லை’ - ஸ்டாலின்

கலைஞர் அவர்களுக்கு இப்போது சட்டமன்றத்தில் இரண்டாவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. எனவே அந்த இடத்திற்கு வீல்சேர் வந்து செல்லக்கூடிய வாய்ப்பு இல்லை என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


 
இது குறித்து செய்தியாளர்களிடத்தில் பேசிய ஸ்டாலின், ’’கலைஞர் சட்டமன்றத்திற்கு வந்து பங்கேற்கக் கூடிய வகையில், அவருடைய வீல்சேர் அவைக்குள் வந்து செல்லக் கூடிய நிலையில், உரிய வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று நாங்கள் முன்பே சபாநாயகருக்கு கடிதம் அளித்து இருந்தோம்.
 
ஆனால் தலைவர் கலைஞர் அவர்களுக்கு இப்போது சட்டமன்றத்தில் எங்கே இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்றால், வீல்சேர் வந்து செல்ல முடியாத சூழ்நிலையில், இரண்டாவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. எனவே அந்த இடத்திற்கு வீல்சேர் வந்து செல்லக்கூடிய வாய்ப்பு இல்லை.
 
ஆகவே நானும், துணைத் தலைவர், கொறடா மற்றும் திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரை அவரது அறையில் சென்று சந்தித்து, வீல்சேரில் வந்து செல்லக்கூடிய நிலையில், தலைவர் கலைஞர் அவையில் பங்கேற்கக்கூடிய வகையில் இடம் ஒதுக்கி, வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கையை சபாநாயகரிடத்தில் வலியுறுத்தி, எடுத்து சொல்லி இருக்கின்றோம்.
 
அதேபோல, 89 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டிருக்கக் கூடிய திராவிட முன்னேற்ற கழகம் இன்றைக்கு எதிர்க்கட்சி என்ற இடத்தில் இருக்கிறது என்பது எல்லாருக்கும் நன்றாகவே தெரியும். எனவே எங்கள் உறுப்பினர்களோடு நாங்கள் கலந்து பேசக்கூடிய வகையில், 89 பேர் உட்கார்ந்து பேசக்கூடிய வகையில் அறையை ஒதுக்கி தரவேண்டும் என்ற கோரிக்கையையும் எடுத்து வைத்திருக்கின்றோம். அந்த கோரிக்கையும் சபாநாயகர் முறையாக பரிசீலிக்கவில்லை என்ற நிலைதான் இதுவரை இருந்து கொண்டிருக்கிறது. எனவே இதையும் இன்று அவரை, அவரது அறையில் சந்தித்தபோது சுட்டிக்காட்டி இருக்கின்றோம்.
 
கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடர்களில் பார்த்தோம் என்று சொன்னால், காங்கிரஸ் கட்சி, அதிமுக, திமுக இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், அதிமுகவை ஒட்டி இருக்கக் கூடிய தோழமைக் கட்சிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பேசுகின்ற வாய்ப்பு கடந்தகால சட்டமன்ற கூட்டத் தொடர்களில் தொடர்ந்து நடந்திருக்கிறது.
 
ஆனால் இந்த முறை வேண்டுமென்றே, திட்டமிட்டு, திராவிட முன்னேற்ற கழகம் 89 சட்டமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கி அவையில் இருக்கின்ற காரணத்தால், 3 பேர் பேசுவதற்கு வாய்ப்பில்லை, 2 பேர்தான் பேச முடியும் என்று சபாநாயகர் சொல்வதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
 
எனவே அதனை மறுபரிசீலனை செய்து 3 பேர் பேசுவதற்கு வாய்ப்பினை ஏற்படுத்தி தர வேண்டும் என்று நாங்கள் சுட்டிக்காட்டி இருக்கின்றோம்” என்றார்.