அதிமுக சசிகலாவிடம்.. ரஜினி பாஜகவிடம்..! – கார்த்திக் சிதம்பரம் சொல்லும் சீக்ரெட்!
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ரஜினிகாந்த் புதுக்கட்சி தொடங்குவது பாஜகவின் அழுத்தத்தினால்தான் என எம்.பி கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் வட்டாரத்தில் நடக்கும் விஷயங்கள் நாள்தோறும் வைரலாகி வருகின்றன. அமமுகவினர் சசிகலா எப்போது விடுதலையாவார் என காத்திருக்க, நீண்ட நாள் காத்திருப்பில் இருந்த ரஜினி ரசிகர்களுக்கு கட்சி தொடங்குவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ரஜினிகாந்த்.
தற்போது இதுகுறித்து பேசியுள்ள எம்.பி கார்த்திக் சிதம்பரம் “சசிகலா விடுதலையானவுடன் அதிமுக அவர் பின்னால் சென்றுவிடும். ரஜினி கட்சி தொடங்குவதில் தனது தொண்டர்களை நம்புவதை விட பாஜகவையே அதிகம் நம்புகிறார்” என கூறியுள்ளார்.
முன்னதாக கமல்ஹாசன் கட்சி தொடங்கியபோதும் அவர் பாஜகவின் பி டீம் என அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்ட நிலையில், இன்று அதே சூழலை ரஜினியின் அரசியல் வருகையும் சந்தித்துள்ளது. இந்நிலையில் முன்னதாக இந்த சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் – சசிகலா இடையேதான் போட்டி நிலவும் என சுப்பிரமணிய சுவாமியும் சொல்லி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.