செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 3 அக்டோபர் 2019 (13:07 IST)

திடீர் அரசியல்வாதிகளுக்கு பதில் சொல்ல முடியாது! – கமலை விளாசிய கனிமொழி

கறை வேட்டி கட்டும் அரசியல்வாதிகள் கறை படிந்தவர்கள் என கமலஹாசன் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் விமர்சனங்களை உண்டாக்கியுள்ளது.

சமீபத்தில் கல்லூரி விழா ஒன்றில் பேசிய கமலஹாசன் “கறை வேட்டு கட்டும் அரசியல்வாதிகள் கறை படிந்தவர்கள்” என கூறினார். இதற்கு கண்டனம் தெரிவித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார் “கமல் ஒரு இண்டண்ட் சாம்பார் மாதிரி! தேவையில்லாமல் ஏதாவது பேசுவார். தேர்தல் நேரத்தில் மட்டும் தலைகாட்டுவார். பிக்பாஸ் போன்ற சமூக கலாச்சார சீரழிவு நிகழ்ச்சிகளை நடத்துவார்” என கூறியுள்ளார்.

கமலின் பேச்சுக்கு தனது கண்டனங்களை தெரிவித்த திமுக எம்.பி கனிமொழி “தமிழகம் இன்று உலக நாடுகளுக்கு இணையாக தொழில் வளத்தில் முன்னேறியிருக்கிறது என்றால் அதற்கு கறை வேட்டி கட்டிய கலைஞர்தான் காரணம். திடீரென அரசியலில் இறங்கி புதிய கருத்துகளை கூறுபவர்களுக்கு பதில் சொல்லி கொண்டிருக்க முடியாது. அரசியல் தெரிந்தவர்களுக்கு கறை வேட்டியின் அருமை தெரியும்” என கூறியுள்ளார்.

கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுமே தங்கள் கட்சி கொடி வண்ணத்தில் கறை வேட்டிகள் கட்டுகின்றனர். கமலஹாசனின் இந்த பேச்சு ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளையும் தாக்கும் வண்ணம் இருப்பதால், அனைத்து கட்சியனருமே தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர்.