திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 13 டிசம்பர் 2020 (08:37 IST)

எல்லாத்துலயும் மொத ஆளா முந்திக்கணும்! – மய்யத்தின் டார்கெட்டில் மதுரை!

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தலில் போட்டியிட உள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் மே மாதம் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்திற்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. முன்னதாக கடந்த மாதமே திமுக தனது தேர்தல் பிரச்சார பயணத்தை கனிமொழி, உதயநிதி ஆகியோர் மூலமாக தொடங்கியுள்ளது. அதிமுக தேர்தலுக்கு முன்னர் நலதிட்ட பணிகளை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் இந்த மாதம் முதலே தனது தேர்தல் பிரச்சார பணியை தொடங்கியுள்ளது.

அதன்படி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று தனது தேர்தல் பிரச்சாரத்தை மதுரையிலிருந்து தொடங்குகிறார். மதுரையில் பெரியார் பேருந்து நிலையம், மேல மாசி வீதி, வடக்கு மாசி வீதி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். பின்னர் மாலை இளைஞர்கள், மாணவர்கள் கலந்து கொள்ளும் கூட்டத்தில் பேசும் அவர், இரவு கட்சி நிர்வாகிகளோடு ஒத்தக்கடை அருகே உள்ள மண்டபத்தில் ஆலோசனை நடத்தி விட்டு நாளை அழகர் கோவில் பகுதியில் வர்த்தக சங்கத்தினர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலரை சந்தித்து பேச உள்ளார்.

முன்னதாக தனது கட்சி தொடங்கும் மாநாட்டு கூட்டத்தையும் மதுரையிலேயே நடத்திய கமல் தேர்தல் பிரச்சாரத்தையும் மதுரையில் தொடங்கியுள்ளதால், மதுரையில் ஒரு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட விரும்பலாம் என்றும் பேசிக் கொள்ளப்படுகிறது.