முரசொலி அழைப்பிதழில் கமல்ஹாசன் பெயர் - கட்சிக்குள் இழுக்கும் முயற்சியா?
திமுக சார்பில் விரைவில் நடைபெறவுள்ள முரசொலி பவள விழாவில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.
திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான முரசொலி தொடங்கி 75 ஆண்டுகள் முடிந்துவிடது. எனவே, அதை கொண்டாடும் வகையில் வருகிற ஆகஸ்டு 10ம் தேதி முரசொலி பவள விழா கொண்டாடப்படவுள்ளது.
இந்நிலையில், அந்த விழாவிற்கான அழைப்பிதழில் நடிகர் கமல்ஹாசன் பெயர் இடம் பெற்றுள்ளது. அதாவது, கமல்ஹாசன் வாழ்த்துறை வழங்குவார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ரஜினியின் பெயர் அதில் இடம் பெறவில்லை. ரஜினி அந்த நிகழ்ச்சியில் பார்வையாளராக மட்டுமே கலந்து கொள்வார் எனக் கூறப்படுகிறது.
சமீப காலமாக ஆளும் அதிமுக அரசுக்கு எதிராக ஊழல் புகார்களை கூறி கமல்ஹாசன் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், திமுக சார்பில் நடைபெறும் விழாவில் அவர் கலந்து கொள்ள இருப்பது, அரசியல் ரீதியாக பார்க்கப்படுகிறது.
மேலும், கமல்ஹாசனை தங்கள் பக்கம் இழுக்க திமுக முயற்சி செய்து வருவதாகவும், அதில் கமல் சிக்கிவிடக்கூடாது என தமிழருவி மணியன் போன்றவர்கள் கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.