கமல்ஹாசனால் முதல்வர் ஆக முடியாது - சாருஹாசன் அதிரடி
நடிகர் கமல்ஹாசனால் முதல்வர் ஆக முடியாது என நடிகரும், அவரின் சகோதரருமான சாருஹாசன் தெரிவித்துள்ளார்.
அரசியலில் ஈடுபடப்போவதாக கமல்ஹாசன் அறிவித்திருக்கும் வேளையில், அவர் தமிழக முதல்வர் ஆக முடியாது என அவரின் சகோதரர் சாருஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கமல்ஹாசனும், ரஜினியும் இணைந்து தேர்தலில் ஈடுபட்டாலே வெறும் 10 சதவீத ஓட்டுகள் மட்டுமே கிடைக்கும். கமல்ஹாசனால் நேரிடையாக முதல்வர் ஆக முடியாது. அதற்கு அவர் விரும்பவும் கூடாது. அதிமுக, திமுக போன்ற கட்சியில் இருந்த தலைவர்களோடு அவர் நெருக்கமாக இருந்து, படிப்படியாக அரசியலுக்கு வந்திருந்தால் அவர் வெற்றி பெற முடியும். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை.
ரஜினியும், கமலும் ஒன்றாக இணைந்து திமுக, அதிமுக போன்ற கட்சிகளோடு இணைந்து தேர்தலை சந்தித்தால் கூட 25 சதவீத ஓட்டுகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனாலும், ஆட்சி அமைக்க 36 சதவீத ஓட்டுகள் தேவைப்படும்.
கமல்ஹாசன் ஒரு சிறந்த அறிவாளி. கெட்டிக்காரர். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், குறிப்பிட்ட சின்னங்களுக்கு மட்டுமே வாக்களித்து பழக்கப்பட்டவர்கள் நம் மக்கள். அவ்வளவு எளிதில் மாற மாட்டார்கள்.
நீங்கள் ஏன் அரசியலுக்கு வரவில்லை? என ரஜினியிடம் கேட்கின்றனர். ஆனால், நீங்கள் ஏன் அரசியலுக்கு வந்தீர்கள்? என கமல்ஹாசனிடம் கேட்கின்றனர். இதிலேயே நமக்கு பதில் ஒளிந்திருக்கிறது.
இது எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்திலும் இருந்தது. சிவாஜி நன்றாக நடிக்கட்டும், ஆனால் எங்கள் அண்ணன் எம்.ஜி.ஆர்-தான் முதல்வர் என மக்கள் நினைத்தனர். கமலுக்கும் அப்படித்தான். அவர் நன்றாக நடிக்கட்டும். ஆனால், ரஜினிக்குதான் எங்கள் ஓட்டு என்றுதான் மக்கள் நினைப்பார்கள். ரஜினிக்கு உள்ள கவர்ச்சி கமல்ஹாசனுக்கு கிடையாது” என அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.