செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (10:57 IST)

கருணாநிதி குறித்து விமர்சிக்கவில்லை… கமல்ஹாசன் விளக்கம்!

கூட்டம் ஒன்றில் பேசிய போது கலைஞரை விமர்சனம் செய்ததாகக் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை ஆரம்பித்து மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறார். வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்காக தயாராகி வருகிறார். திமுக மற்றும் அதிமுகவோடு கூட்டணி இல்லை என உறுதியாகக் கூறிவிட்ட நிலையில் வேறு எந்தவொரு கட்சியோடும் கூட்டணி அமைக்கவில்லை. இப்போது சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கூட்டணி குறித்து இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. 

இந்நிலையில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் கமல்ஹாசன் சமீபத்தில் ஒரு கூட்டத்தில் ‘நான் ஆக்டிவ்வாக இருக்கும் வரைதான் அரசியலில் இருப்பேன். சக்கர நாற்காலி காலம் வரை எல்லாம் இருந்துகொண்டு உங்களுக்கு தொல்லைக் கொடுக்க மாட்டேன்’ எனக் கூறினார். சக்கர நாற்காலி என்று சொன்னது தங்கள் தலைவர் கலைஞரை அவமதிக்கும் வகையில் உள்ளதாக திமுகவினர் இப்போது கமல்ஹாசனுக்கு எதிராகக் கண்டனங்களை எழுப்பியுள்ளனர்.

அதையடுத்து இப்போது கமல்ஹாசன் தன் பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் ‘மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மீது மிகுந்த மரியாதை இருப்பதாகவும், அவரது முதுமை குறித்து விமர்சிக்கவில்லை. என்னுடைய முதுமை குறித்து மட்டுமே பேசினேன்’ என விளக்கம் அளித்துள்ளார்.