வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 3 ஏப்ரல் 2023 (08:48 IST)

கலாஷேத்ரா பாலியல் புகார்; தலைமறைவான ஹரிபத்மன் கைது!

Hari Padman
சென்னை கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாக புகார் அளிக்கப்பட்ட உதவி பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு சொந்தமான ருக்மிணி தேவி நுண்கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைகளை பயிற்றுவிக்கும் இக்கல்லூரியில் ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த கல்லூரி பேராசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக புகார் எழுந்தது.

அதை தொடர்ந்து முன்னாள் மாணவிகள் சிலரும் கலாஷேத்ராவில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடப்பதாக கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மகளிர் ஆணையம் கலாஷேத்ராவில் விசாரணை மேற்கொண்டு அதன் அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சமர்பித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மற்றும் 3 பேர் மீது புகார் உள்ளது. இந்த வழக்கில் ஹரி பத்மனை இன்று கைது செய்ய போலீஸார் திட்டமிட்டிருந்த நிலையில், கலாச்சார நிகழ்ச்சி ஒன்றிற்காக மாணவிகளுடன் ஹைதராபாத் சென்றிருந்த ஹரி பத்மன் தலைமறைவாகிவிட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் ஹரிபத்மனை தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வந்தனர். வடசென்னை பகுதியில் அவரது நண்பர் ஒருவர் வீட்டில் ஹரி பத்மன் பதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் விரைந்த தனிப்படை போலீஸார் ஹரி பத்மனை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டால் மேலதிக விவரங்கள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K