வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : ஞாயிறு, 27 டிசம்பர் 2015 (08:47 IST)

கடுகு சிறுத்தாலும் காரம் போகாது: கருணாநிதி

கடுகு சிறுத்தாலும் காரம் போகாது - கருணாநிதி

கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பதை திமுக பெற இருக்கும் வெற்றியின் மூலம் மெய்ப்பித்துக் காட்டுவோம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.


 

 
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள கடிதம் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
திமுக வின் தேர்தல் நிதிக்கு கணிசமாக வழங்கிட வேண்டும் என்று நான் கேட்டுக்கொண்டு ஒரு சில மாதங்கள் ஆகின்றன.
 
நேற்று வரையில் நீங்கள் அன்போடு அளித்த – ஆர்வத்தோடு வழங்கிய அந்த நிதி, சிறு துளி பெருவெள்ளமாகப் பெருகி 21 கோடியே 93 லட்சத்து 96 ஆயிரத்து 534 ரூபாய் என்ற அளவுக்குச் சேர்ந்துள்ளது.
 
இந்த 22 கோடி ரூபாயை, தமிழக ஆளுங்கட்சி பல வகைகளிலும் குவித்து வைத்திருக்கின்ற மிகப்பெரு நிதியோடு ஒப்பிட்டால், சிறு கடுகாகத்தான் தோன்றும். ஆனால் "கடுகு சிறுத்தாலும் காரம் போகாது" என்ற முதுமொழிக்கொப்பத்தான், இந்த நிதியை நானும் நம்முடைய திமுக தொண்டர்களும் கருதி மகிழ்வோம் என்பதை நிதி வழங்கிய தொண்டர்களாம் நீங்கள் நன்கறிவீர்கள்.
 
வரும் தேர்தல்கள் சட்டமன்றம் ஆனாலும், பாராளுமன்றம் ஆனாலும், 2 மன்றங்களிலும் நம்முடைய கட்சியினர் பெரும் எண்ணிக்கையில் இடம்பெற வேண்டும்.
 
அதற்கேற்ப தொண்டர்களாகிய, உங்களுடைய பணி அமைந்திடவேண்டும். தேர்தல் பணிகளை மாத்திரம் சிறப்பாக ஆற்றிவிட்டு தேர்தல் நிதியைத் திரட்டுவதில் சிந்தனை இல்லாமல் அக்கறைகாட்டாமல் இருந்து விடக்கூடாது.
 
அதிலும் நீங்கள் மேலும் ஆர்வம் காட்டுவீர்களேயானால், நீங்கள் தந்துள்ள – இன்னும் தரப்போகிற தேர்தல் நிதியை வைத்து அனைவரும் மகிழத்தக்க வெற்றியை வரப்போகின்ற தேர்தல்களில் நாம் பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக இருக்கின்றது.
 
நீங்கள் வழங்கி வருகின்ற இந்தத் தேர்தல் நிதி எண்ணிக்கையில் எளிமையாகத் தெரிந்தாலும், உங்கள் இடத்தில் நான் கொண்டுள்ள நம்பிக்கையை ஒவ்வொரு நாளும் என் நெஞ்சில் வளர்த்துக்கொண்டுதான் இருக்கிறது என்பதை உறுதிபடக் கூறிக்கொள்கிறேன்.
 
இந்த உறுதிக்கு ஒரு நாள்கூட ஊறுவராமல், தொடர்ந்து தேர்தல் நிதி வழங்கும் பணியை மேலும் என்னை ஊக்குவிக்கும் வகையில், "கட்சியை எங்கள் உழைப்பால் கட்டிக் காப்போம் – எதிர்ப்பினை நெட்டித் தள்ளுவோம்" என்ற உங்கள் உணர்வுகளைச் செயல் மூலம் காட்ட இந்தத் தேர்தல் நிதி மட்டுமல்ல; திராவிட இன உணர்வை மேலும் வளர்க்க ஒன்றுபட்டு உழைப்போம் என்ற உறுதியை நீங்கள் மேற்கொள்ளுவீர்களேயானால், இந்த நிதி தரும் மகிழ்ச்சியைவிட பெரும் மகிழ்ச்சியை நான் பெறுவேன்.
 
பணக்காரர்களிடம், தொழில் முதலாளிகளிடம், பல கோடி ரூபாய் வைத்திருப்போரிடம் நான் தேர்தல் நிதி கேட்டுப் பழக்கப்பட்டவன் அல்ல.
 
தொண்டர்களிடம்தான் நான் திரும்பத்திரும்பக் கேட்டுவருகிறேன். தொண்டர்களும் தவறாமல் கொடுத்துக் கொண்டே வருகிறார்கள். ஆனால் நம்முடைய எதிரியிடம் குவிந்திருக்கும் பண பலத்தை எண்ணிடும் போது, இப்போது நீ கொடுத்துள்ள நிதி போதவே போதாது என்பதை உணர்ந்து, நாட்கள் இன்னும் சிலதான் இருக்கின்றன என்பதையும் மனதிலே கொண்டு, வெட்டி வா என்றால், கட்டி வரும் உள்ளத்தோடு பெருநிதியைக்கொண்டு வந்து கட்சி நிதியோடு சேர்ப்பதிலும், தேர்தல் பணிகளைத் தொய்வில்லாமல் ஆற்றுவதிலும் இன்றிலிருந்தே நீ முனைப்புக் காட்டிட வேண்டும். 
 
தேர்தல் பணிகள் குறித்து தொடர்ந்து நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவ்வப்போது எழுதுகிறேன். கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பதை திமுக பெற இருக்கும் வெற்றியின் மூலம் மெய்ப்பித்துக் காட்டுவோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.