வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 30 ஜூலை 2018 (15:45 IST)

கருணாநிதிக்காக மூட நம்பிக்கை பிரார்த்தனை வேண்டாம்: கீ.வீரமணி

திமுக தலைவர் கருணாநிதி கடந்த மூன்று நாட்களாக உடல்நலமின்றி சென்னை காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று அவர் படித்த பள்ளி, ஆலயங்கள் ஆகியவற்றில் பிரார்த்தனை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்  சுயமரியாதை கொள்கையை கடைபிடித்த கருணாநிதி உடல்நலம் பெற பிரார்த்தனை என்ற மூடநம்பிக்கை சடங்குகளில் தி.மு.க.வினர் ஈடுபடவேண்டாம் என திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளதாவது:

கருணாநிதியை மதிப்பது என்பது அவர் கட்டிக் காத்து வந்த, பின்பற்றி வந்த கொள்கையை மதிப்பது தான்.  பகுத்தறிவு இயக்கமான தி.மு.கவின் கொள்கைகள், விழைவுகளுக்கு முற்றிலும் மாறான செயல்களில் தெரிந்தோ, தெரியாமலோ யாரும் ஈடுபட்டு விடக்கூடாது.   ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது நிகழ்ந்த மூடநம்பிக்கை கூத்துக்கள் தி.மு.க.விலும் நுழைந்து விட கூடாது

மருத்துவமனை முன்பு யாரோ ஒருவர் பூசணிக்காய் சுற்றி படைத்ததைத் தொலைக்காட்சியில் கண்டு வேதனை அடைந்தேன். கொள்கை உணர்வுகளை எதிரிகள் கொச்சைப்படுத்திட ஒருபோதும் இடம் தந்துவிடக் கூடாது.

இவ்வாறு கீ.வீரமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்