தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி நியமனம்..!
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமியை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில் அரசியல் கட்சிகள், தீவிரமாக தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. தேர்தல் ஆணையமும், தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
உள்ளாட்சி மற்றும் நகராட்சித் தேர்தல்களை நடத்துவது சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் பணியாகும். தற்போது, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக உள்ள ஐஏஎஸ் பழனி குமாரின் பணிக்காலம் இன்றோடு நிறைவடைந்தது. இதையடுத்து புதிய தேர்தல் ஆணையராக நியமிக்கப்படப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஒப்புதலையடுத்து, மாநில தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமியை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.