’ஜாஸ் சினிமாஸ்’ பதினோறு திரையரங்குகளை வாங்கினார்களா? இல்லையா? - கருணாநிதி கேள்வி


லெனின் அகத்தியநாடன்| Last Updated: வியாழன், 19 நவம்பர் 2015 (14:41 IST)
ஜெயலலிதாவுடன் இருப்பவர்கள் இந்தத் திரையரங்குகளை வாங்கினார்களா? இல்லையா? வாங்கியிருந்தால் எத்தனை கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டன? அந்தப் பணம் எங்கிருந்து, எதன் மூலம் கிடைத்தது? என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
 
 
இது குறித்து திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னை - வேளச்சேரியில் உள்ள “பீனிக்ஸ்”  மார்க்கெட் சிட்டியில் இடம் பெற்றுள்ள பதினோறு திரையரங்குகளை “ஜாஸ் சினிமாஸ்” நிறுவனம் கைப்பற்றியது பற்றி, தமிழகத்திலே உள்ள எதிர்க் கட்சிகளின் சார்பில் விடுத்த அறிக்கைகளில், விரிவாகக் குறிப்பிட்டு,  இதற்கு ஜெயலலிதா அரசின் பதில் என்ன என்று கேட்டுப் பல  நாட்கள் ஆகியும்,  அரசிடமிருந்து இதுவரை எந்தவிதமான பதிலும் இல்லை.
 
மேலும் ஜாஸ் சினிமாஸ் நிறுவனம், ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரி சசிகலாவின் குடும்பத்தினருக்குச் சொந்தமானவை என்பதையும்,  அதற்கான ஆதாரங்களையும் தெளிவாகத் தெரிவித்த பிறகும், அந்தத் தரப்பினரும்  எந்த விதமான விளக்கமும்  இதுவரை தர வில்லை.
 
3-11-2015 அன்று நான் விடுத்த அறிக்கை யில் “இப்படிப்பட்ட கடுமையான  குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரங்களுடன்  வந்திருக்கிற போது,  அரசுப் பொறுப்பிலே இருப்பவர்கள் இதுவரை இதற்கு எந்தவிதமான பதிலும் சொல்லாமல் அமைதி காத்து வரும்  நிலையில்,  குற்றச்சாட்டுகள் உண்மை தான் என்று அனைவரும்  யூகித்திடத் திடமான இடம் ஏற்பட்டு விட்டது  அல்லவா?
 
எனவே மக்கள் மனதிலே எழுந்துள்ள பொருள் பொதிந்த வினாக்களுக்கு விளக்கமான பதிலை அரசுத் தரப்பில் உடனடியாகத்  தர வேண்டும். ஜெயலலிதாவுடன் இருப்பவர்கள் இந்தத் திரையரங்குகளை வாங்கினார்களா? இல்லையா? வாங்கியிருந்தால் எத்தனை கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டன? அந்தப் பணம் எங்கிருந்து, எதன் மூலம் கிடைத்தது? அந்தத் திரையரங்குகள் மிரட்டி வாங்கப்பட்டன என்ற குற்றச்சாட்டு உண்மையா?
 
அந்தத் திரையரங்கங்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் திட்டமிட்டுத் தாமதப்படுத்தப்பட்டனவா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் உரியவர் களிடமிருந்து பதில் வர வேண்டாமா? இந்தச் சொத்துக்களை வாங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், ஏற்கனவே லஞ்ச ஊழல் குற்றத்திற்காக வழக்கைச் சந்தித்துக் கொண்டிருப்பவர்கள் அல்லவா?
 
ஏற்கனவே பல சொத்துக்களை அவர்கள் வாங்கியதாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தினால் கடுமையாகத் தண்டிக்கப்பட்டவர்கள் அல்லவா? இப்போதாவது அவர்கள் தமிழக மக்களுக்கு உரிய விளக்கத்தினைத் தர வேண்டாமா?
 
சொத்துக் குவிப்பு வழக்கு உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கின்ற நிலையில், இந்தப் புதிய சொத்துக் குவிப்புக்கு என்ன பதில் என்று நாடே எதிர்பார்க்கிறது” என்று கேட்டிருந்தேன்.   இதற்கும் எந்தவிதமான பதிலும் இல்லை.
 
மீண்டும் 11-11-2015 அன்று நான் விடுத்த அறிக்கையில், வேளச்சேரி பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் உள்ள 11 தியேட்டர்களையும் விலைக்கோ அல்லது வாடகைக்கோ பெற்ற ஜாஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள் யார்?
 
தமிழக அரசிடம் இருந்து “பார்ம் என்” லைசென்ஸ் அவர்களுக்கு நேரடியாகக் கிடைக்கவில்லையா? அதன் காரணமாகத் தான் ஜாஸ் நிறுவனத்திடம் தியேட்டர்களைக் கொடுக்க வேண்டிய நெருக்கடி அவர்களுக்கு ஏற்பட்டதா? ஜாஸ் நிறுவனத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குத்தகைத் தொகை எவ்வளவு?
 
தமிழக அரசிடமிருந்து “பார்ம் என் லைசென்ஸ்” கேட்டு எப்போது விண்ணப்பிக்கப்பட்டது? அந்த உரிமத்தை வழங்காமல் அரசு பல நாட்கள் இழுத்தடித்தது என்பது உண்மையா? இல்லையா?    தியேட்டர்களுக்கான அனுமதி தமிழக அரசிடமிருந்து எப்போது கிடைத்தது?
 
முதன் முதலில் இந்தச் செய்தியை வெளியிட்ட “இந்து”, “பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியிலே உள்ள திரையரங்குகளை சத்யம் சினிமாஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாகத் தானே செய்தி வெளியிட்டது. அந்த சத்யம் சினிமாஸ் நிறுவனத்திற்கும், பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டிக்கும் என்ன தொடர்பு?
 
சத்யம் சினிமாஸ் நிறுவனத்திடமிருந்து, திரையரங்கம் நடத்தும் உரிமையை ஜாஸ் நிறுவனம் பெற்றதா? அல்லது பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி நிறுவனத்திடமிருந்து அவர்கள் அறிக்கையிலே சுட்டிக்காட்டியிருப்பது போல நேரடியாகப் பெற்றதா?
 
லுhக்ஸ் எனப்படும் 11 திரையரங்குகளுக்கு 2014 மார்ச் மாதத்தில் அனுமதி வழங்கப்பட்டதாகச் சொல்லப்படுவது உண்மை என்றால்;  2014 மார்ச் மாதம் முதல் 2015 ஜனவரி மாதம் வரை அந்த 11 திரையரங்குகளை நடத்திக் கொண்டிருந்தது யார்? சத்யம் சினிமாஸ் நிறுவனம் தானே? அதை ஏன் மறைக்கிறீர்கள்?   
 
2013 செப்டம்பர் மாதத்தில் சத்யம் சினிமாஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீது நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டதாக    பத்திரிகைகளில் செய்தி வெளிவந்ததே; அந்த வழக்கின் அடிப்படையில் தான் தற்போது, சத்யம் சினிமாஸ் நிறுவனம் மிரட்டப்பட்டு, இந்த 11 திரையரங்குகள் ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனவா?
 
“பி.வி.ஆர். சினிமா நிறுவனம், சத்யம் சினிமா நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திரையரங்குகளை 600 கோடி ரூபாயிலிருந்து 1000 கோடி ரூபாய் வரை கொடுத்து வாங்க முயற்சித்ததாக “இந்து” ஆங்கில நாளிதழ் முதன் முதலாகச் செய்தி வெளியிட்டிருந்ததே,  அந்த பி.வி.ஆர். நிறுவனத்திற்குச் சொந்தமான திரையரங்குகளுக்கு  அரசிடம் அனுமதி கேட்டு விண்ணப்பம் போடப்பட்டது எப்போது?   அதற்கு அனுமதி வழங்கப்பட்டாகி விட்டதா? எப்போது? வழங்கப்படவில்லை என்றால், அவர்கள் அவற்றை விற்பதற்கு முன் வராதது தானா?
 
“ஜாஸ்” நிறுவனத்தின் உயர் பொறுப்பிலே இருப்பவர் சாட்சாத் இளவரசி யின் மகன் விவேக். அவர் நிர்வாகத்திலே உள்ள நிறுவனம், தியேட்டரை வாடகைக்கு எடுத்து நடத்துகிறது என்றால் அதற்கான முதலீடு எங்கிருந்து, யார் மூலம் கிடைத்தது? 
 
“ஜாஸ்” சினிமா நிறுவனம், கோவை - பீளமேடு பாங்க் ஆப் இந்தியா வங்கியிலிருந்து, 2015 ஜனவரியில், 42 கோடியே 50 இலட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ள நிலையில், “லக்ஸ்” திரையரங்குகளில் உள்ள புரஜக்டர், ஃபர்னிச்சர், ஏர் கண்டிஷனர்கள், ஆகியவற்றை கடனுக்கு அடமானமாகக் காட்டியிருக்கிறார்கள்.
 
தியேட்டர்களை விலைக்கு வாங்காமல், ஐந்தாண்டுகளுக்குக் குத்தகைக்கு மட்டுமே எடுத்ததாகக் கூறப்படும் ஒரு நிறுவனம், திரையரங்குகளில் உள்ள தளவாடங்களைக் காட்டி, நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கியில்  கடன் பெற முடியுமா?
 
இந்தக் கேள்விகள் எதற்கும் தமிழக அரசிடமிருந்தோ, ஜெயலலிதாவிடமிருந்தோ, சசிகலா - இளவரசி தரப்பினரிடமிருந்தோ ஜாஸ் நிறுவனத்திடமிருந்தோ இன்று வரை எந்தவிதமான பதிலும் இல்லாததால், எதிர்க் கட்சிகளும், ஊடகங்களும் தெரிவித்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என்றாகிறது.
 
பதிலளிக்கப்படாத இந்தக் குற்றச்சாட்டுகள் தமிழக மக்கள் மத்தியில் காட்டுத் தீயெனப் பரவிக் கொண்டிருக்கும் நிலையில், சசிகலா குடும்பத்தினருக்கு உரிமையான “ஜாஸ்” சினிமாஸ் நிறுவனம் பற்றி மேலும் தகவல் கிடைத்துள்ளது. அதாவது  காட்பாடியில் உள்ள பாலாஜி திரையரங்கத்தை, இந்த நிறுவனத்தினர் பெற்று நடத்தி வருகிறார்களாம்.
 
அந்தச் செய்தி உண்மை தானா? சசிகலா குழுவினரின் ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில், இந்தியா முழுவதும் 136 திரையரங்குகள் இருப்பதாகச் சொல்லப்படுவது உண்மையா?   அதற்கான பணம் எங்கிருந்து, யாரால், கிடைத்தது? அவற்றுள் ஒன்று தான் காட்பாடியில் உள்ள பாலாஜி திரையரங்கமா?
 
அண்மையில் தீபாவளிக்கு வெளியான “வேதாளம்” திரைப்படத்தினை தமிழகம் முழுவதும் வெளியிடுவதற்கான உரிமையைக் கூட இந்த “ஜாஸ்” நிறுவனத்தினர் தான் பெற்றிருக்கிறார்களாம்! கேளிக்கை வரியை திரையரங்கங்களே அனுபவித்துக் கொள்ளும் வகையில் அ.தி.மு.க. அரசு முரண்பாடான நிலைப்பாடு எடுத்து நீதிமன்றத்தில் வாதாடியதற்கான காரணமே, ஏராளமான திரையரங்குகள் ஜாஸ் நிறுவனத்துக்கு உரிமையுடையதாக இருப்பதால் தானா?
 
ஆனால் அதற்கு வழி யில்லாமல், நீதிமன்றம் கேளிக்கை வரியை திரையரங்குகள் பெற வழியில்லாமல் செய்துவிட்டது!
 
“பீனிக்ஸ் மால்”  கட்டிடத்திற்குள்ளே “ஐ-மேக்ஸ்” என்ற நவீன வசதியுடன் கூடிய புதிய திரை அரங்கம் உள்ளது. இந்தத் திரையரங்கில் திரைப்படங்களைத் திரையிட தமிழக அரசு தற்போது அனுமதி வழங்கியிருப்பதாக ஒரு செய்தி “இந்து”, “தினகரன்” போன்ற நாளேடுகளில் நேற்று (18-11-2015) வெளிவந்துள்ளது.
 
“ஐ-மேக்ஸ்” திரையரங்கில் திரைப்படத்தை மிகப் பிரமாண்டமான முறையில் “3-டி எபெக்டில்” தொழில் நுட்பத்தோடு கண்டுகளிக்க முடியும். “ஐ-மேக்ஸ்” திரையரங்குகள் பெங்களூர், ஐதராபாத், மும்பை போன்ற நகரங்களில் தான் ஏற்கனவே இருந்து வருகின்றன.
 
தற்போது சென்னை - வேளச்சேரி “பீனிக்ஸ்” மாலில் உள்ள திரையரங்கிலும் நவம்பர் 20ஆம் தேதி முதல் படம் “ஐ-மேக்ஸ்” தொழில் நுட்பத்தோடு காட்டப்பட விருக்கிறதாம். இங்கே படம் பார்க்க ஒரு டிக்கெட்டின் விலை 360 ரூபாயாகும். தற்போது மற்ற தியேட்டர்களில் அதிகப் பட்சக் கட்டணம் 120 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 
அதற்கு மேல் கட்டணம் வசூலிக்க வேண்டுமென்றால் தமிழக அரசிடம் அனுமதி பெற வேண்டும் ஆனால் “பீனிக்ஸ் மால்” கட்டிடத்தில் உள்ள “ஐ-மேக்ஸ்” திரையரங்கில் டிக்கெட் கட்டணமாக  360 ரூபாய் வசூலிக்க தமிழக அரசு ஆணை பிறப்பித்திருக்கிறதாம்.
 
இந்தத் திரையரங்குக்கு அனுமதி கேட்டு, எஸ்.பி.ஐ. சினிமா நிறுவனம்  கடந்த மூன்றாண்டுகளாக காத்திருந்ததாகவும்,  தற்போது இந்தக் கட்டிடத்தில் உள்ள 11 திரையரங்குகளை ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் வாங்கிய பிறகு தான், இந்தத் திரையரங்குக்கும் அனுமதி கிடைத்திருக்கிறதாம். இவையும் உண்மை தானே?
 
இது போலவே தான் நெல்லை மாவட்டத்தில் “பெப்சி” நிறுவனத்திடம் 36 ரூபாய் குத்தகைத் தொகை பெற்றுக் கொண்டு 90 ஆண்டுகளுக்கு பதினைந்தே நாட்களுக்குள் அ.தி.மு.க. அரசு தாரை வார்த்தது பற்றியும் நான் விளக்கியிருந்தேன். ஆனால் அ.தி.மு.க. ஆட்சி இன்னும் ஐந்து மாதங்களில் முடிவுக்கு வரவுள்ள நிலையில்,  எந்தவிதமான கேள்விகளுக்கும் பதில் தராததிலிருந்து, இப்படிப்பட்ட தவறுகளுக்கெல்லாம் ஜெயலலிதா அரசிலே இருப்போரும், அவர்களது அரவணைப்பிலே வாழ்ந்து வருவோரும், அவர்களது உறவினர்களும்தான் முழு முதற்காரணம் என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது அல்லவா?
 
கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு என்பதால் தானே தமிழக மக்கள்  உரிய காலத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள்!


இதில் மேலும் படிக்கவும் :