வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Annakannan
Last Modified: புதன், 6 ஆகஸ்ட் 2014 (17:03 IST)

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 51% குறைந்துள்ளன - புள்ளி விவரத்துடன் ஜெ. பதில்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகப்படியாக நிகழ்கின்றன எனத் தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர் சந்திரகுமார் குற்றம் சாட்டியதற்கு முதல்வர் ஜெயலலிதா பதில் அளித்துள்ளார். வரதட்சணைக் கொலைகள், பாலியல் கொடுமைகள், மானபங்க வழக்குகள் போன்ற குற்றங்கள் குறைந்துள்ளன எனப் புள்ளி விவரங்களுடன் அவர் பேசினார்.
 
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 6.8.2014 அன்று நடைபெற்ற காவல் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு, தேசிய முற்போக்கு திராவிடக் கழக உறுப்பினர் வி.சி. சந்திரகுமார் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளித்து ஜெயலலிதா ஆற்றிய உரை வருமாறு: 
 
எனது தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து, காவல் துறையினர் பெண்களுக்கெதிரான குற்றங்களின் மீது அதிக கவனம் செலுத்தி, எந்தவித சுணக்கமும் காட்டாமல் அனைத்து புகார்களின் மீதும் வழக்கு பதிவு செய்து, எதிரிகளை கைது செய்து, அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். 
 
இதன் காரணமாக, மாநிலத்தில் பெண்களுக்கெதிரான குற்றங்கள் குறிப்பாக, வரதட்சணைக் கொலைகள், பாலியல் கொடுமைகள், மானபங்க வழக்குகள் போன்ற குற்றங்கள் குறைந்து வருகின்றன. 
 
உதாரணமாக, திமுக ஆட்சியின் இறுதியில் 2010ஆம் ஆண்டு நடந்த வரதட்சணை கொலைகள் 165 ஆகும். கடந்த 2013ஆம் ஆண்டு வரதட்சணை கொலை வழக்குகள் 118 மட்டுமே தாக்கல் ஆகியுள்ளன. 2010ஆம் ஆண்டு தாக்கலான வரதட்சணை கொலை வழக்குகளை 2013ஆம் ஆண்டு தாக்கலான வழக்குகளோடு ஒப்பிடுகையில், இக்கொலை வழக்குகள் 28.48 சதவிகிதம் குறைந்துள்ளன. கடந்த 2011ஆம் ஆண்டு 152 வழக்குகளும், 2012ஆம் ஆண்டு 110 வழக்குகளும் தாக்கலாகியிருந்தன. 
 
மேலும், கடந்த 2010ஆம் ஆண்டு இறுதியில் நடந்த பாலியல் கொடுமைகள் 638. ஆனால் எனது தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பின்பு, 2011ஆம் ஆண்டு நடந்த பாலியல் கொடுமை வழக்குகள் 464 ஆகக் குறைந்ததுடன், 2012ஆம் ஆண்டு இக்கொடுமைகள் 382 ஆக மேலும் குறைந்துள்ளன. கடந்த 2013ஆம் ஆண்டு பாலியல் கொடுமை வழக்குகள் 313 மட்டுமே தாக்கலாகியுள்ளன. 2010ஆம் ஆண்டு தாக்கலான பாலியல் கொடுமை வழக்குகளை 2013ஆம் ஆண்டு தாக்கலான வழக்குகளோடு ஒப்பிடுகையில், இவ்வழக்குகள் 51 சதவிகிதம் குறைந்துள்ளன. 
 
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 51 சதவிகிதம் குறைந்துள்ளபோது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகப்படியாக நிகழ்கின்றன என்று மாண்புமிகு உறுப்பினர் பேசுகிறார் என்றால், விவரமே தெரியாமல் பேசுகிறார் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். 
 
இதே போன்று, முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சியின் போது, 2010ஆம் ஆண்டு மானபங்க வழக்குகள் 1,405 ஆக இருந்தது. இது 2011ஆம் ஆண்டு 1,467 ஆகவும், 2012ஆம் ஆண்டு 1,494 ஆகவும் தாக்கல் ஆகியுள்ளன. கடந்த 2013ஆம் ஆண்டு 1,271 மானபங்க வழக்குகள் மட்டுமே தாக்கல் ஆகியுள்ளன. 2010ஆம் ஆண்டு தாக்கலான மானபங்க வழக்குகளை 2013ஆம் ஆண்டு தாக்கலான வழக்குகளோடு ஒப்பிடுகையில் இவ்வழக்குகள் 9.54 சதவிகிதம் குறைந்துள்ளன. 
 
ஆனால், கடந்த மைனாரிட்டி திமுக ஆட்சியின் போது, 2010இல் வரதட்சணைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 199 ஆகும். இவ்வழக்குகள் 2011ஆம் ஆண்டு 195 ஆகவும் குறைந்து, 2012ஆம் ஆண்டில் 277 வழக்குகளாகவும், 2013இல் 305 வழக்குகளாகவும் உயர்ந்துள்ளன. மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களின் மீது அதிக கவனம் செலுத்தி, பெறப்படும் அனைத்துப் புகார்கள் மீதும் உடனடியாக வழக்கு பதிவு செய்து, எதிரிகள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ள, காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டு, அதன்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதைத் தொவித்துக் கொள்கிறேன். 
 
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து, எனது ஆட்சியில் பெண்கள் தைரியமாகப் புகார் தர முன் வருகிறார்கள். 
 
பெண்களுக்கு எதிரான குற்றங்களின் மீது முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் தகுந்த நடவடிக்கைகள் இல்லாது முடித்து வைக்கப்பட்டதால், பாதிக்கப்பட்டோர் அனைவரும் புகார் அளிக்க முன்வரவில்லை. ஆனால், தற்போது காவல் துறையினர் முன்பு போல் அல்லாமல் குற்றவாளிகள் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதால், பாதிக்கப்பட்டவர்கள் எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் புகார்களை அளித்து வருவதன் காரணமாக இவ்வழக்குகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
இவ்வாறு ஜெயலலிதா பதில் அளித்தார்.