ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதைப் போற்றி அரசு செலவில் ஆவணப்படமா?: ராமதாஸ் கண்டனம்

Ramadoss
Suresh| Last Updated: சனி, 1 ஆகஸ்ட் 2015 (19:35 IST)
ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதைப் போற்றி, அரசு செலவில் ஆவணப்படத்தை தயாரித்து வெளியிட்டு மகிழ்வதை ஏற்க முடியாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

வருவாய்க்கு மீறிய வகையில் ரூ.66.65 கோடி சொத்துக் குவித்த வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டிருக்கிறது.

அதேநேரத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை போற்றும் வகையில் "தர்மம் வெல்லும்" என்ற தலைப்பில் ஆவணப்படம் தயாரிக்கப்பட்டு அனைத்து திரையரங்குகளிலும் திரையிடப்பட்டு வருகிறது.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு அரசியல் பழிவாங்கலுக்காகத் தொடரப்பட்ட பொய் வழக்கு என்றும், அந்த வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதன் மூலம் நீதி வெற்றி பெற்றிருக்கிறது என்றும் அந்த ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா எப்படி விடுதலை செய்யப்பட்டார்? இவ்வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பு எவ்வளவு தரமானது என்பதை அனைவரும் அறிவார்கள்.
உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் முடிவில் நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில் தம்மைத் தாமே போற்றிக் கொள்ளும் வகையில், அரசு செலவில் ஆவணப்படத்தை ஜெயலலிதா தயாரித்து வெளியிட்டு மகிழ்வதை ஏற்க முடியாது; இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

ஒரு வகையில் பார்த்தால் இந்த ஆவணப்படம் தமிழக அரசுக்கு எதிரானது ஆகும். ஜெயலலிதா மீது சொத்துக்குவிப்பு வழக்கைத் தொடர்ந்தது தமிழக அரசின் கையூட்டு ஒழிப்புத் துறைதான்.

ஜெயலலிதா மீது வழக்குத் தொடர்ந்ததை விமர்சிப்பது அரசின் செயல்பாட்டை குறை கூறுவதாகும். ஜெயலலிதாவை போற்ற வேண்டும் என்பதற்காக அரசு செலவில் அரசை விமர்சிப்பது சரியானதல்ல.

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டது சரியா? தவறா? என்ற வாதத்தை ஒதுக்கி வைத்து விட்டு பார்த்தால் கூட, ஜெயலலிதாவைப் பற்றி இப்படி ஒரு ஆவணப்படம் அரசு செலவில் வெளியிடப்படுவதை நியாயப்படுத்த முடியாது.
ஏனெனில், ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்குத் தொடரப்பட்டதும், அதிலிருந்து விடுவிக்கப்பட்டதும் அரசு நிர்வாகத்துடன் எவ்வகையிலும் தொடர்பில்லாதவை. சொத்துக் குவிப்பு வழக்கு என்பது ஜெயலலிதா என்ற தனி மனிதர் மீது தொடரப்பட்டதாகும்.

அவ்வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டதும், பின்னர் அவ்வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டதும் அவரது தனிப்பட்ட விஷயங்கள்.
தமிழ்நாட்டில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய விஷயங்கள் ஏராளமாக இருக்கும் போது அவற்றை விட்டு விட்டு, ஜெயலலிதாவின் புகழ் பாடும் ஆவணப்படத்தை வெளியிடுவது தமிழ்நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகும்.

எனவே, தர்மம் வெல்லும் என்ற தலைப்பிலான ஆவணப்படம் திரையரங்குகளில் திரையிடப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். அத்திரைப்படத்தை தயாரிக்கவும், இதுவரை திரையிடவும் ஆன செலவுகளை ஜெயலலிதாவிடமிருந்து வசூலிக்க மாநில ஆளுனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :