1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: ஞாயிறு, 10 மே 2015 (17:43 IST)

தொண்டர்கள் நிதானம் காக்க வேண்டும்: ஜெயலலிதா மீண்டும் கட்டளை!

ரயில் முன் பாய்ந்து அதிமுக பிரமுகர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து, தொண்டர்கள் உணர்ச்சி வயப்படாமல் நிதானம் காக்க வேண்டும் என்று ஜெயலலிதா மீண்டும் கட்டளையிட்டுள்ளார்.
 

 
இதுகுறித்து, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
 
அதிமுக தலைமையின் மீது மிகுந்த பேரன்பு கொண்டு பல்வேறு தியாகங்களை தொடர்ந்து செய்து வரும் கழக தொண்டர்கள், ஒரு சில இடங்களில் எனக்குப் பெரிதும் மனவேதனையைத் தருகின்ற வகையில் தங்கள் இன்னுயிரையே மாய்த்துக்கொள்ளும் செயல்களிலும் ஈடுபட்டுவிடுகின்றனர்.
 
அண்மையில், திருநெல்வேலி புறநகர் மாவட்டம், கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி 5வது வார்டு செயற்குழு உறுப்பினர் எம்.முத்தையா ரயில் முன் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என்ற செய்தி அறிந்து மிகவும் துடிதுடித்தேன்.
 
என் உயிரினும் மேலான எனதருமைக் கழக தொண்டர்கள் உணர்ச்சிவயப்படாமல் நிதானம் காக்க வேண்டும் என்று மீண்டும் கட்டளை இடுகிறேன்.
 
முத்தையாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். மேலும், அவரது குடும்பத்திற்கு கழகத்தின் சார்பில் குடும்ப நல நிதியுதவியாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.