மே 17ஆம் தேதி - தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்பு: கசியும் தகவல்கள்!

Jayalalitha
வீரமணி பன்னீர்செல்வம்| Last Modified திங்கள், 11 மே 2015 (20:10 IST)
தமிழக முதல்வர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ய உள்ளதையடுத்து, பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதலமைச்சர் பதவி ஏற்கின்றார்.
 
 
சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு தனி நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.
 
இதனால், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதா, பின்பு உச்ச நீதிமன்றத்தில் ஜாமீனில் பெற்று வெளியே வந்தார். இதனால், தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, தனது பதவியை துறக்க நேரிட்டது.
 
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு எதிரான இந்த வழக்கில், பெங்களூரூ தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடியோடு ரத்து செய்துள்ளதோடு, அபராதத் தொகை ரூ.100 கோடியையும் தள்ளுபடி செய்து பெங்களூரூ உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி உத்தரவிட்டார்.
 
இதனால், தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா வரும் மே 17ஆம் தேதி, தமிழக கவர்னர் மாளிகையில் பதவியேற்றுக் கொள்வார் என்று அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றது. இதற்கான ஏற்பாடுகள் ஆளுநர் மாளிகையில் தற்போது முதலே, விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
இதற்கு தோதாக தற்போது முதலமைச்சராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :